Tamilnadu
IPL Mega Auction: சுரேஷ் ரெய்னாவுக்கு சென்னை அணியில் இடமுண்டா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வீரர்களில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர். ஐ.பி.எல் வரலாற்றில் அந்த அணியின் வெற்றிகரமான பயணத்திற்கு சுரேஷ் ரெய்னா மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட ரெய்னாவை சென்னை அணி இந்த முறை ஏலத்தில் எடுக்குமா? என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 ஆம் ஆண்டில் முதல் சீசனிலிருந்தே ரெய்னா சென்னை அணிக்காக ஆடி வருகிறார். தோனிக்கு பிறகு சென்னை அணியில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் வீரராக ரெய்னாவே இருந்தார். ஐ.பி.எல் இல் இதுவரை மொத்தமாக 5500+ ரன்களை அடித்திருக்கிறார். அதில், இரண்டு ஆண்டு சென்னை அணி தடை செய்யப்பட்ட போது குஜாராத்திற்காக அடித்த ரன்களும் அடக்கம். அவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தாலும் சென்னை அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரராக சுரேஷ் ரெய்னாவே இருப்பார். ஒவ்வொரு சீசனிலுமே 400 முதல் 500 ரன்களை சீராக எடுத்திருப்பார். நம்பர் 3 பொசிஷனில் அசைக்க முடியாத வீரராக இருந்தார். ஆனால், இதெல்லாம் 2018 வரைதான். அதன்பிறகு, சுரேஷ் ரெய்னா மங்க தொடங்கினார். அதுவரை 140+ ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக ஆடி வந்த ரெய்னா 2018 க்கு பிறகு 120 ஸ்ட்ரைக் ரேட்களிக் ஆட ஆரம்பித்தார். பழைய மாதிரியான தாக்கத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை. 2020 ஐ.பி.எல் சீசன் துபாயில் நடந்த போது கொரோனா பரவல் காரணமாக அந்த ஒட்டுமொத்த சீசனையுமே புறக்கணித்தார். 2021 ஐ.பி.எல் சீசனில் 12 போட்டிகளில் ஆடி வெறும் 160 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ரெய்னாவின் ஆஸ்தான நம்பர் 3 பொசிஷனை தோனி மொயீன் அலிக்கு வழங்கினார். ரெய்னா கீழ் வரிசையில் ஆட வேண்டியிருந்தது. நாக் அவுட் சமயத்தில் காயம் காரணமாக ரெய்னா பென்ச்சிலும் வைக்கப்பட்டார். இறுதிப்போட்டிக்கு எப்படியும் அணிக்கு திரும்பிவிடுவார் என நினைக்கையில் இறுதிப்போட்டியிலுமே பென்ச்சிலேயே வைக்கப்பட்டார். ரெய்னா இல்லாமல் சென்னை ஆடிய முதல் இறுதிப்போட்டியாக அந்த போட்டி அமைந்தது. அதில் வென்று சாம்பியனும் ஆனது. ரெய்னா இல்லாமல் சிஎஸ்கே இல்லை என்ற நிலை மாறி ரெய்னா இல்லையென்றாலும் சிஎஸ்கே சாம்பியனாகும் என நிறுவப்பட்டது.
இந்த சமயத்தில்தான் 2022 மெகா ஏலத்திற்கு முன்பாக அணிகள் 4 வீரர்களை தக்கவைக்கலாம் என அறிவிக்கப்பட்டது. சென்னை அணி ஜடேஜா, தோனி, ருத்துராஜ், மொயீன் அலி ஆகியோரை தக்கவைத்துக் கொண்டது. ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அணி ரெய்னாவை தக்கவைக்காமல் கழட்டிவிட்டது. ஏற்பதற்கு கடினமாக இருந்தாலும் ரெய்னாவின் தற்போதைய ஃபார்ம் சரியில்லை என்பதால் ரசிகர்களும் ஒரு மாதிரியாக அந்த முடிவை ஜீரணித்துக் கொண்டனர். தக்கவைக்க தவறிவிட்டாலும் ரெய்னாவை ஏலத்திலாவது சென்னை அணி எடுக்குமா என்பதே ரசிகர்களின் இப்போதைய கேள்வி.
ஒரு வீரரை ஏலத்தில் எடுக்க வேண்டுமெனில் அவர் சமீபமாக கிரிக்கெட்டில் எப்படி செயல்பட்டிருக்கிறார் என்பதையே அணிகள் அளவீடாக வைக்கும். ரெய்னாவை பொறுத்தவரைக்கும் அவர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். சில ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக எந்த போட்டியிலும் ஆடியிருக்கவில்லை. அதனால் ரெய்னா விஷயத்தில் சர்வதேச போட்டிகளை ஒரு அளவீடாக பார்க்க வழியில்லை. அடுத்து உள்ளூர் போட்டிகள் என்று வந்தாலும் அதிலும் ரெய்னாவிற்கு சிக்கலே ஏற்படுகிறது. கடைசியாக 2021 ஜனவரியின் நடந்த சையத் முஷ்தாக் அலி தொடரிலேயே ரெய்னா ஆடியிருந்தார். அந்த தொடரிலும் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்தார். அதன்பிறகு, எந்த உள்ளூர் தொடரிலும் ரெய்னா ஆடியிருக்கவில்லை. அதனால், உள்ளூர் போட்டிகளை வைத்தும் ரெய்னாவை தேர்ந்தெடுக்க முடியாது. கடைசி ஐ.பி.எல் சீசன் என பார்த்தால் அதிலும் ரெய்னாவின் ரெக்கார்டுகள் அடிவாங்கியே இருக்கிறது. எந்த அடிப்படையில் அணிகள் ரெய்னாவை ஏலத்தில் எடுக்க முன் வரும் என்பதே குழப்பமாக இருக்கிறது. அதற்காக ரெய்னா ஏலத்தில் விற்கப்படாத வீரராக ஆகிவிடுவார் என சொல்ல முடியாது.
புஜாராவிற்கு மதிப்பளிக்கும் வகையில் அவரை ஏலத்தில் எடுத்து பென்ச்சில் மட்டுமே வைத்திருந்ததை போல ரெய்னாவையும் அவரின் இத்தனை வருட பங்களிப்பையும் கௌரவிக்கும் வகையில் அவரையும் ஏலத்தில் எடுத்து அணிக்குள் வைத்துக்கொள்ள் முயலலாம். சீனியராக இளம் வீரர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்க ரெய்னா பயன்படுவார். கேதார் ஜாதவ் கடுமையாக சொதப்பி ட்ரோல் மெட்டீரியல் ஆன சமயத்திலும் கேதார் ஜாதவ்வை சன்ரைசர்ஸ் ஏலத்தில் எடுத்திருந்தது. அதற்கு அவரின் நீண்ட கால அனுபவமும் ஒரு காரணமாக இருந்தது. அதேமாதிரி அனுபவத்தை முன்வைத்து ரெய்னாவை வேறு சில அணிகளும் ஏலத்தில் எடுக்க வாய்ப்பிருக்கிறது.
ரெய்னா ஏலத்தில் விற்கப்படாத வீரராகவே போனாலும் சரி, அவர் கடந்த காலத்தின் சென்னை அணிக்காக செய்த பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. அதற்காக அவர் என்றைக்குமே கொண்டாடப்பட்டுக் கொண்டேதான் இருப்பார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!