Tamilnadu

நீட்: “மோசமான தேர்வை அது மோசமானதுதான் என 5 ஆண்டுகளாக வாதிட வேண்டியுள்ளது” - முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை!

நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதற்காக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டியது தமிழ்நாடு. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஏன் தமிழ்நாட்டுக்கு நீட் வேண்டாம்’ என்பதைக் குறிப்பிட்டு ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் உரையாற்றியிருந்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

”திமுக எதிர்கட்சியாக அன்று இருந்து, அதிமுக ஆளுங்கட்சியாக அன்றைய தினம் இருந்தாலும் இணைந்து ஒருமுகமாக நின்று நீட் விலக்கு மசோதாவை 1.2.2017 அன்று இதே அவையில் நிறைவேற்றினோம்.

அந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் 27 மாதங்கள் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டது. இறுதியில் திருப்பி அனுப்பப்பட்டது. அப்போதே இரண்டாவது முறையாக நீட் விலக்கு சட்டத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கலாம். அந்த வாய்ப்பு தவறிப் போனது.

இந்த சூழலில்தான்- திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததும்- ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைத்தோம்.

அந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்று- நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற சட்ட முன்வடிவை 13.9.2021 அன்று நிறைவேற்றி அனுப்பினோம்.

மாநில அமைச்சரவை அப்படி அறிவுறுத்தினால்- ஆளுநர் அதன்படி உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். (Governor Should do forthwith).

அரசியல் சட்டப்பிரிவு 254(1)-ன் கீழ் மாநில சட்டமன்றம் சட்டம் நிறைவேற்றினால்- அரசியல் சட்டப்பிரிவு 200-ன் கீழ் அதற்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். (The Governor must abide by the advice of the Council of the Ministers).

ஆளுநருக்கு அனுப்பப்படும் சட்டமுன்வடிவு தன் கொள்கைக்கு மாறாக உள்ளது என்று நிராகரிக்காமல்- அமைச்சரவை என்ன அறிவுரை வழங்குகிறதோ அதன்படிதான் நடக்க வேண்டும்.

அதைத்தான் 2006-ல் இருந்த ஆளுநர் அவர்கள்- நுழைவுத் தேர்வு ரத்து என்று சட்ட முன்வடிவை மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய போது செய்தார்.

அதனால்தான் 13.9.2021 அன்று நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க சட்ட முன்வடிவினை நிறைவேற்றினோம். அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டியது ஆளுநரின் கடமை.

அந்த கடமையை முறையாக இனியாவது ஆளுநர் செய்வார் என நான் எதிர்பார்க்கிறேன். அதுதான் சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்திற்கு உட்பட்டு ஆளுநர் நிறைவேற்ற வேண்டிய கடமை.

அந்த கடமையை நிறைவேற்றவில்லை என்பதால் நானே நேரில் ராஜ்பவனுக்குச் சென்றேன். ஆளுநரிடம் வலியுறுத்தினேன். மூத்த அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் அவர்கள் நேரில் சந்தித்து ஆளுநரை வலியுறுத்தினார்.

நம் மாநில எம்.பி.க்கள் எல்லாம் குடியரசுத் தலைவரை சந்திக்க முயற்சித்து- அவரது அலுவலகத்தில் மனுவினை அளித்து வலியுறுத்தினார்கள். ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள்.

அதன் பிறகு- ஏறக்குறைய 142 நாட்கள் கழித்து- நீட் விலக்கு சட்ட முன் வடிவை திருப்பி அனுப்பி- மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் ஆளுநர்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், 30.3.1967ல் இதே அவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய போது, “கவர்னர் பதவியே வேண்டாமென்று முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகம் சொன்ன நேரத்தில் அது ரொம்ப பைத்தியக்காரத்தனம் என்று பேசிக் கொண்டிருந்த அரசியல் வட்டாரத்தில் ஒரு பகுதி இன்றைய தினம் அதே கண்ணோட்டத்திற்கு வந்திருப்பதற்காக நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டதை நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.

அது போன்றதொரு சூழலை- நமது ஆளுநர் நிச்சயம் உருவாக்க மாட்டார் என்றும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை எண்ணி- இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்படும் இந்த சட்டமுன்வடிவினை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்று நம்புகிறேன்.

மாநிலங்கள் அதிகளவில் அதிகாரங்களைப் பெறத்தக்க விதத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும்' என்ற அண்ணாவின் இறுதி இலக்கை அடையவும் - 'மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி ' என்ற கலைஞரின் முழக்கத்தை வென்றெடுக்கவும்- இந்த நாள் மிக முக்கியமான நாளாக அமைந்துள்ளது.

இந்த சட்டமுன்வடிவை முன்மொழிவதன் மூலமாக நானும் அதனை ஆதரித்து வாக்களிப்பதன் மூலமாக நீங்களும் செய்யும் செயல் என்பது இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகளைக் காப்பாற்றும். ஒற்றையாட்சித் தன்மையை நாடாக இந்தியா மாறாமல் தடுக்கும்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியிருந்தார்.

முன்னதாக ”என்னுடைய வேதனை எல்லாம், மிக மோசமான ஒரு தேர்வு குறித்து, அது மோசமானது தான் என்று இவ்வளவு நீண்ட நேரம் வாதிட வேண்டியதாக இருக்கிறதே என்பதுதான். நாம் சொல்வது புரிய வேண்டியவர்களுக்கு இன்னமும் புரியாமல் இருக்கிறதே என்பதுதான்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, டெல்லி அமைச்சர் ஒருவரிடம் பேசினாராம்.

கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை விவகாரம் பற்றி போன் செய்து பேசி உள்ளார். அப்போது கள்ளக்குறிச்சி என்றால் என்ன என்பதைப் பற்றியே 15 நிமிடம் விளக்கம் அளிக்க வேண்டியதாக இருந்தது என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

அது மாதிரி நீட் தேர்வின் மோசமான அம்சங்களை நாம் ஐந்தாண்டு காலமாக விளக்கிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இன்னும் அவர்களுக்கு புரியவில்லை. புரிய மறுக்கிறார்கள் என்பதுதான் உண்மை." என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருந்தார்.

Also Read: “நீட் ஒரு பலி பீடம்.. சமத்துவத்துக்கு முற்றிலும் முரணானது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை முழு விவரம் !