Tamilnadu
“வயிற்றில் நூடுல்ஸ் பாக்கெட்.. பிளாஸ்டிக் கழிவுகள்”: காட்டெருமை இறப்பால் அதிர்ச்சியடைந்த மருத்துவக் குழு!
நீலகிரி மாவட்டம் 65 சதவிகிதம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது. இங்கு வன விலங்குகளான யானை, புலி, கரடி, சிறுத்தை, காட்டு மாடு உட்பட அரியவகை விலங்கினங்கள், பறவைகள், ஊர்வன வகைகள் உள்ளன. இதுமட்டுமின்றி அவ்வப்போது வெளிநாட்டு பறவைகளும் இங்கு வந்து செல்கின்றன.
இத்தகைய இயற்கை எழில் மிகுந்து காட்சியளிக்கும் நீலகிரி வனப்பகுதியை பாதுகாக்க தமிழ்நாடு வனத்துறை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வனப்பகுதியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், மக்கள் அலட்சியமாக நடந்துக்கொள்வது தொடர்ந்து வருகிறது.
மக்கள் வீசி எறியும் பிளாஸ்டிக் குப்பையால் வனவிலங்குகள் கடுமையாக பாதுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கோத்தகிரி அருகே அளக்கரை பகுதியில் உணவுடன் அதிகளவு பிளாஸ்டிக்கும் உட்கொண்ட காட்டெருமை உயிரிழந்த சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவை உணவைத் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும் தேயிலை தோட்டத்திற்கும் வந்து செல்கின்றன.
இந்த நிலையில், கோத்தகிரி அருகே அளக்கரை கிராமத்தில் தேயிலை எஸ்டேட்டில் உணவு தேடி வந்த காட்டெருமை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கட்டப்பெட்டு வனச்சரகர் செல்வகுமார் தலைமையில் வனவர்கள் ஃபெலிக்ஸ், சசி உட்பட வனத்துறை ஊழியர்கள் ஆய்வு செய்ததில் 6 வயதுடைய ஆண் காட்டெருமை என தெரியவந்தது.
தொடர்ந்து கால்நடை மருத்துவர் ராஜூ தலைமையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், காட்டெருமையின் குடல் பகுதியில் தோட்டங்களில் உரங்களுக்கு பயன்படுத்தும் நைலான் பிளாஸ்டிக் பைகள் மற்றும் நூடுல்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்களின் பிளாஸ்டிக் கவர்களும் இருந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு, அதே இடத்தில் புதைக்கப்பட்டது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!