Tamilnadu

"கழக ஆட்சியைக் குறை கூற பழனிசாமிக்கு அருகதை இல்லை": தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சேலம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காணொலி வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் கழகமும், கழகக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும்தான் மாபெரும் வெற்றியைப் பெறப் போகிறார்கள். அதில் யாருக்கும் இம்மியளவும் சந்தேகம் இல்லை. இருந்தாலும் கழகத் தலைவர் என்கிற முறையில் எனது பரப்புரையை நேற்று முதல் நான் தொடங்கி இருக்கிறேன்.

நேற்றைய தினம் கோவை மாவட்ட மக்களிடம் காணொலி மூலமாக 300 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசினேன். இன்று சேலம் மாவட்டத்தில் 526 இடங்களில் காணொலி மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய கூட்டத்தில் உங்களிடையே பேசுகிறேன். நாளைய தினம் கடலூர் வாக்காளப் பெருமக்களிடையே பேச இருக்கிறேன்.

வருகிற 17 ஆம் தேதி வரையிலும் எனது பரப்புரைப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்த இருக்கிறேன். கொரோனா காலமாக இல்லாமல் இருந்தால், உங்களைத் தேடி, நாடி நானே சேலத்துக்கு வந்திருப்பேன். கொரோனா காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் மாபெரும் பொதுக்கூட்டங்கள், பரப்புரைப் பயணங்களை நடத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். நேரடியாக வரமுடியாவிட்டாலும், நவீன தொழில்நுட்ப வசதியோடு உங்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பார்த்துப் பேசும் அளவுக்கு இன்று நாம் காணொலிக் காட்சி வாயிலாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளோம்.

21 மாநகராட்சிகள் - 138 நகராட்சிகள் -490 பேரூராட்சிகள் - என மொத்தமுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடக்க இருக்கிறது. 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள் - 8,288 பேரூராட்சி உறுப்பினர்கள் - 3,468 நகராட்சி உறுப்பினர்கள் ஒரே கட்டமாகத்தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

இவை அனைத்திலுமே கழக வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். ஸ்டாலின் ஏதோ பேராசைப் படுகிறான் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது. நான் நினைப்பது பேராசை அல்ல. என்னுடைய இந்த எண்ணம் என்பது சுயநலமான எண்ணம் அல்ல. பொதுநலத்தோடுதான் இப்படி ஆசைப்படுகிறேன். அனைத்து இடங்களிலும் முழுமையான வெற்றியை நாம் அடைந்தால்தான் - கோட்டையில் இருந்து நாம் அறிவிக்கும் நலத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மனிதரையும் சென்றடையும். சட்டமன்றத்தில் நிறைவேற்றும் திட்டங்களை - அரசாங்கம் வழங்கும் உதவிகளை - மக்கள் கையில் சேர்க்கும் கடமையும் பொறுப்பும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கையில்தான் இருக்கிறது. அதனால்தான் அனைத்து நன்மைகளும் அனைவரையும் சென்றடைய நமது வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று நான் சொல்கிறேனே தவிர, வேறல்ல.

எல்லா இடங்களிலும் நாம்தான் வெற்றி பெறுவோம், அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நமக்கான செல்வாக்கு என்பது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிக அதிகளவு கூடி இருக்கிறது. நமக்கு வாக்களிக்கத் தவறியவர்கள் கூட, இப்போது நமக்காக வாக்களிக்கும் முடிவோடு அந்த மனநிலைக்கு வந்து விட்டார்கள். நம்மைக் கடுமையாக விமர்சித்தவர்கள் கூட, இப்போது தங்களது விமர்சனத்தைக் குறைத்துவிட்டார்கள். எனவேதான் நாம் முழுமையான வெற்றியைப் பெறுவோம் என்று சொன்னேன். இதில் சேலத்தின் வெற்றிச் செய்தி மிகமிக முக்கியமானது என்பதை முதலிலேயே நான் சொல்லிக் கொள்கிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில், இங்கு நாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெற இயலவில்லை. அதற்கான காரணங்களுக்குள் நான் இப்போது செல்ல விரும்பவில்லை. சட்டமன்றத் தேர்தலில் கைநழுவிய வெற்றியை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் கைப்பற்றியாக வேண்டும். இந்த உறுதிமொழியை மாவட்டக் கழகச் செயலாளர்கள் - நம்முடைய நிர்வாகிகள் - கழக வேட்பாளர்கள் - கூட்டணிக்கட்சியைச் சார்ந்த தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

திராவிட இயக்கத்தின் வரலாற்றில் மிக முக்கியமான ஊர் இந்த சேலம்.

1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் நாள் இதே சேலத்தில் தான் நமது தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் உருவானது. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்தான் அந்தப் பெயரைச் சூட்டினார்கள். அதிலிருந்து உருவானதுதான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்! இத்தகைய பெருமைக்குரிய மாவட்டத்தில் கழகம் முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும்.

* முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் இளமைக் கால வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த ஊரும் சேலம்தான்!

1949 - 50 காலக்கட்டத்தில் சேலம் கோட்டைப் பகுதியில் ஹபீப் தெருவில்தான் கலைஞர் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். சேலம் மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்காக சேலத்தில் தங்கி மந்திரிகுமாரி படத்துக்குக் கதை-வசனம் தீட்டினார். இத்தகைய மாவட்டத்தில் கழகம் முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும்.

* சேலம் என்றால் வீரபாண்டியார் மாவட்டம் என்று அழைக்கக்கூடிய அளவுக்கு வீரபாண்டியாரின் கோட்டையாக இருந்த மாவட்டம் இந்தச் சேலம்! அத்தகைய சேலம் மாவட்டத்தில் கழகம் முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும்.

* 1997 சேலம் மாநாட்டு ஊர்வலத்தைத் தலைமையேற்று நடத்திச் செல்லும் வாய்ப்பை நான் பெற்றேன். அத்தகைய சேலம் மாவட்டத்தில் நாம் முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

* 2004-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநில மாநாட்டில் 50 அடி உயரத்தில் கழகக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை அண்ணன் வீரபாண்டியார் அவர்களால் பெற்றேன். அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். தலைவர் கலைஞர் அவர்களைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வைத்து சாரதியாக வீரபாண்டியார் ஓட்டிச் சென்ற மாநாடு அது. அந்த மாநாட்டுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் கலைஞரின் 80-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முத்துவிழாவும் சேர்ந்து கொண்டாடப்பட்ட மாநாடு அது. அத்தகைய சேலம் மாவட்டத்தில் நாம் முழு வெற்றியைப் பெற்றாக வேண்டும்.

சேலம் மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக இருக்கும் நேரு அவர்களும் - மாவட்டச் செயலாளர்களும் - மற்ற பொறுப்பாளர்களும் – நிர்வாகிகளும் – கழக முன்னணியினரும் – தோழர்களும் அந்த வெற்றியைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் இருக்கிறது.

இன்னும் சொன்னால் இந்த சேலம் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டிய ஆட்சி திமுக ஆட்சி என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும்!

* சேலம் உருக்காலை, ஐம்பது ஆண்டுக் கனவான சேலம் ரயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம், சேலத்தில் அரசு மகளிர் கலைக் கல்லூரி, ஆத்தூரில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, சேலம் மாநகராட்சிக்காக 283 கோடி ரூபாயில் காவிரி தனி கூட்டுக் குடிநீர்த் திட்டம், சேலம் மாநகரத்துக்கு 183 கோடி ரூபாய் செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டம்

mk stalin

* சேலம் திருமணி முத்தாறு - வெள்ளக்குட்டை ஓடை தூய்மைப்படுத்த 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு, சேலத்தில் 136 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, ஏத்தாப்பூரில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம்,11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்காட்டில் தாவரவியல் பூங்கா, சேலம் மாவட்டத்தில் 9 உழவர் சந்தைகள், சேலம் - ஆத்தூர் குடிநீர்த் திட்டம், 38 கோடி ரூபாய் மதிப்பில் சேலம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

* 150 கோடி ரூபாய் மதிப்பில் உயர் மற்றும் தாழ்வழுத்த புதை கம்பி தொடர் மின் பாதைகள், மேட்டூரில் 600 மெகாவாட் அனல் மின் திட்டம், ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர் பகுதிகளில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்கள். சேலம் நகர காவல் ஆணையர் அலுவலகத்துக்குப் புதிய கட்டடம், சேலம் - கிருஷ்ணகிரி நான்கு வழிப்பாதையைப் போட வைத்தது.

* சேலம் - நாமக்கல் நான்கு வழிப்பாதை, சேலம் - செங்கப்பள்ளி நான்கு வழிப்பாதை, தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமானசேவை திமுக ஆட்சியில்தான் மீண்டும் தொடங்கப்பட்டது.

இவை எல்லாம் கடந்த முறை செய்த சாதனைகள்தானே என்று சொல்வீர்களேயானால் - கடந்த எட்டுமாத காலத்தில் செய்த சாதனைகளையும் என்னால் வரிசையாகப் பட்டியல் போடமுடியும். அமைச்சர் கே.என். நேரு அவர்களை இம்மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக அறிவித்ததும் இந்த மாவட்டம் முழுக்கவும் சுற்றிச் சுழன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம்களை நடத்தி இருக்கிறார்.

35 ஆயிரத்து 217 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 10 ஆயிரத்து 623 மனுக்கள் உடனடியாக அரசால் ஏற்கப்பட்டுள்ளன. மற்ற மனுக்கள் அரசுத் துறைகளின் மேல் விசாரணையில் உள்ளன. இதைத் தொடர்ந்து சேலத்தில் அரசு நலத்திட்ட விழா கடந்த டிசம்பர் 11 அன்று நடந்தது. நானே கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

அன்றைய தினம் 261 கோடியே 39 இலட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் 38 கோடியே 52 இலட்ச ரூபாய் மதிப்பிலான 83 பணிகள் முடிவுற்று திறந்து வைக்கப்பட்டன. 80 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். இவை அனைத்திலும் மேலாக 30 ஆயிரத்து 837 பேருக்கு நலத்திட்ட உதவிகள் தரப்பட்டன. 26 அரசுத் துறைகளின் சார்பாக 168 .64 கோடி ரூபாய் மதிப்பில் இந்த நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. இப்படி ஒவ்வொருவர் தேவையையும் அறிந்து நிறைவேற்றி வரும் அரசுதான் கழக அரசு.

* சேலம் சேகோ சர்வ் நிறுவனத்தின் மேம்பாட்டுத் திட்டத்துக்காக 80.5 கோடி ரூபாய் நிதி அளிப்பதாக அறிவித்துள்ளோம். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்திக் கூடம் தொடங்கப்பட்டுள்ளது.

* சேலம் வடக்கு - பொன்னம்மாப்பேட்டை பகுதி சீலாவரி ஏரியைத் தூர் வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பொன்னம்மாப்பேட்டை, அரிசிபாளையம் பகுதியில் 5.5 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை, வடிகால்வசதி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

* சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் திறந்து வைக்கப்பட்டது. அஸ்தம்பட்டி பகுதியில் மின்சாரப் பணிகளை மேற்கொள்ள 23 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 2500 அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆவின் பால் முகவர், பணியாளர் சங்கத்துக்கு புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.மேச்சேரி அரங்கனூரில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்க நிலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திட்டம்பட்டி நீர்த் தேக்கத்தில் இருந்து உபரி நீரை எம்.கள்ளிப்பட்டிக்கு நீரேற்றம் மூலம் தொடங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைக்கு தேவையான வெண்டிலேட்டர் மற்றும் உயர்தர வசதியுடன் கூடிய இயந்திரங்கள் வழங்கப்பட்டன. ஜலகண்டபுரம் பேரூராட்சி - அண்ணா சிறுவர் பூங்கா மற்றும் காமராஜர் பூங்கா சீரமைப்புப் பணிகள் தொடங்கி உள்ளன.

*பனைமரத்துப்பட்டியில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. ஜருகுமலை பகுதியில் நியாய விலைக் கட்டடம் கட்டித் தரப்பட்டுள்ளது. மேட்டூர் உபரி நீர் ஓமலூர் சுற்று வட்டாரத்தில் உள்ள மானத்தால், பாலப்பட்டி, தொளசம்பட்டி, பெரியேரிப்பட்டி, எம்.செட்டிப்பட்டி ஏரிகளுக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.

* கருப்பூர் பேரூராட்சியில் சிட்கோ தொழிற்பேட்டையில் விமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.சேலம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் கழிவுநீர் பாதை அமைக்கும் பணிகள் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கி உள்ளன.

* பேளூர் பேரூராட்சி அரசு மருத்துவமனைக்கு 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.- இவை அனைத்தும் எட்டு மாத காலத்துக்குள் செய்து தரப்பட்ட திட்டங்கள் ஆகும். மறுபடியும் சொல்கிறேன்... இவை அனைத்தும் எட்டு மாத காலத்துக்குள் தீட்டப்பட்ட திட்டங்கள்.

இதேபோல் ஒட்டுமொத்தமாக இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைத் தீட்டி இருக்கிறோம். அதில் சிலவற்றை மட்டும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

* சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் பாதாளச் சாக்கடைகள். தங்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வசதிகள். ஏரி, குளங்களை மேம்படுத்தும் பணிகள். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மேம்பாலங்கள் - சாலைகள் மேம்பாடு. விளையாட்டு அரங்கம். ஜவுளிப் பூங்கா. கொலுசு உற்பத்தியாளர்களுக்கான மையம்.டைடல் மென்பொருள் தொழில் பூங்கா - இப்படி பல்வேறு திட்டங்களைத் திட்டமிட்டு உருவாக்க இருக்கிறோம்.

இன்னும் அடுத்தடுத்து நிறைய திட்டங்கள் வர இருக்கிறது. இப்படி அதிமுகவினரால் பட்டியல் போட்டுச் சொல்ல முடியுமா? முன்பு முதலமைச்சராக இருந்தவர், இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். அவர் தனது சொந்த மாவட்டத்துக்கு என்ன செய்தார்? அதனை அவரால் பட்டியல் போட முடியுமா?

நேற்றைய தினம் எடப்பாடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய பழனிசாமி அவர்கள், திமுக - பொய்யான - கவர்ச்சியான வாக்குறுதிகளைத் தந்ததாகக் குற்றம் சாட்டி இருக்கிறார். நாங்கள் கொடுத்த வாக்குறுதியில் 70 விழுக்காடு வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்பது மக்களுக்கே தெரியும். சொன்னதோடு சேர்த்தோடு சொல்லாத திட்டங்களையும் செய்து காட்டியிருக்கிறோம்.

* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் 2 இலட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மகளிருக்குப் பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம் - இதனால் 40 விழுக்காடாக இருந்த மகளிர் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 61 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது

* கொரோனா கால நிவாரணமாக 4,000 ரூபாய்; ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு; பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு; முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு ரூபாய் 317 கோடியிலான பல்வேறு திட்டங்கள்; மீனவர்களுக்கு வழங்கக்கூடிய சிறப்பு உதவித் தொகை 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்வு; மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்

* அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஒரு காலப்பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்7.5 சதவிகித சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பிற்குத் தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு சேர்க்கை அரசு ஆணை–கடந்த ஆட்சியில் அறவழியில் போராடிய மக்கள் மீது தொடரப்பட்ட 868 வழக்குகளைத் திரும்பப்பெற்றது.

* “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.5,000/- வழங்கும் திட்டம்வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன்காக்க “புலம்பெயர் தமிழர் நலவாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிப்புசம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையான 1597 கோடியே 18 இலட்ச ரூபாய் சுமார் 6 இலட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் பணி “இல்லம் தேடிக் கல்வி” திட்டம்

* மின்னகத்தில் 24 மணி நேர மின் நுகர்வோர் சேவை மையம். எல்லைப் போராட்டத் தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு நேர்வாக ரூ.1 இலட்சம் பொற்கிழி. ரூ.11.14 கோடி மதிப்பில் “தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்" தமிழ்நாடு சிட்கோ தொழில்மனைகள் விலை குறைப்பு. மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 750 கோடி ரூபாய் கடனுதவி

* 36 மாவட்டங்களில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்கள்.இன்னுயிர காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டம்”."மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கம் காவேரி டெல்டாவில் 61 கோடி ரூபாய் செலவில் குறுவை சாகுபடித் தொகுப்பு. இந்த நிதியாண்டில், 4 இலட்சத்து 2 ஆயிரத்து 829 பேர் கொண்ட 29 ஆயிரத்து 425 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* ஆக்கிரமிப்பிலிருந்த 1,628 கோடி ரூபாய் மதிப்பிலான 432 ஏக்கர் பரப்பளவிலான திருக்கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட, பின்குறுவை பருவத்தில் விளைந்த பயிர்கள், சேதமடைந்த முன்பருவத்தில் பயிரிடப்பட்ட விளைந்த சம்பா நெற்பயிர்கள், மறுநடவுச் செலவு, பயிறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள், சிறு தானியப் பயிர்கள், கரும்புப் பயிர்கள், தென்னைப் பயிர்கள் ஆகியவற்றிற்கு நிவாரணமாக 1 இலட்சத்து 62 ஆயிரம் எக்டேருக்கும் அதிகமான நிலங்களுக்கு 132 கோடியே 12 இலட்சம் ரூபாய் நிதி மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது

சமூகநீதிப் போராளிகளுக்கு விழுப்புரத்தில் நினைவு மண்டபம். நெசவாளர் கோரிக்கையை ஏற்று பஞ்சுக்கு நுழைவு வரி ரத்து; அரசுப் பணியாளர்களுக்கு 14% அகவிலைப்படி உயர்வு; தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கம்; கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக் கடன்களும், தமிழக வரலாற்றில் முதன்முறையாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் முழுமையாக ரத்து.

- இவை அனைத்தும் எட்டு மாத காலத்தில் செய்யப்பட்டுள்ளதில் சில மட்டுமே. பழனிசாமி இந்த எட்டு மாத காலத்தில் எங்கே பதுங்கி இருந்தார்?

அவர் எதை கவர்ச்சியான வாக்குறுதி என்கிறார்? எதைப் பொய்யான வாக்குறுதி என்கிறார்? அவரது ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலையும், கொள்ளையும் நடந்தது. அதில் உண்மைக் குற்றவாளி யார் என்றும் உண்மையான காரணம் யார் என்றும், கூலிப்படையை அமர்த்தியது யார் என்றும், ஏவியது யார் என்றும் கண்டுபிடித்தாரா? அதைக் கண்டுபிடிக்கத் துப்பு இல்லாதவர்களுக்கு திமுக ஆட்சியைப் பற்றிக் குறை சொல்ல என்ன அருகதை இருக்கு?

தினசரி கொலை, கொள்ளை நடப்பதாக அவர் சொல்லி வருகிறார். அதிமுக ஆட்சியில் இருந்தபோதுதான், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலித அவர்களின் முகாம் அலுவலகமாகச் செயல்பட்ட கொடநாடு பங்களாவிலேயே கொலையும் நடந்தது. கொள்ளையும் நடந்தது. இது சம்பந்தமான வழக்குகளைப் பதிவு செய்தது அதிமுக ஆட்சிதான்.

இதில் சம்பந்தப்பட்ட சிலர், அப்போது சொல்ல முடியாத சில தகவல்களை இப்போது சொல்வதற்கு முன் வந்துள்ளார்கள். அதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. இந்த வழக்கை தூசி தட்டி எடுக்கிறோம் என்றதும், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள். ஆளுநரையும் போய்ப் பார்த்தார்கள். அதற்கும் என்ன காரணம் என எனக்குத் தெரியாது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அடையாளமாக இருந்த கொடநாடு வீட்டில் கொலை, கொள்ளை நடந்திருக்கிறது என்பதால் அதில் உள்ள மர்மங்களை திமுக ஆட்சி அமைந்ததும் அது பற்றி விசாரிப்போம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் நானே குறிப்பிட்டுப் பேசினேன். அதனால்தான் ஆட்சி அமைந்ததும் அது சம்பந்தமான விசாரணையை முடுக்கிவிட்டேன். இதில் எங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை; அரசியலும் இல்லை.

எந்த வழக்கிலும் மேற்கொண்டு புலன் விசாரணையை காவல்துறை நடத்தலாம். மேல் புலன் விசாரணை (Further Investigation) என்பது குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டத்தின் 173 பிரிவின்படி நடத்தப்படுவது. அதன்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின்னர் கூடுதல் தகவல் கிடைத்தால் அதை முறைப்படி விசாரணை செய்ய காவல்துறைக்கு உரிமையும் கடமையும் உண்டு. அதன்படிதான் நடத்தப்படுகிறது. இதுவும் நாங்கள் கொடுத்த வாக்குறுதிதான். இது பொய்யான வாக்குறுதியும் கிடையாது. கவர்ச்சிகரமான வாக்குறுதியும் கிடையாது. அம்மா வீட்டில் நடந்த கொலை - கொள்ளையில் உண்மையைக் கண்டுபிடியுங்கள் என்று அதிமுகவினரே சொல்கிறார்கள். அவர்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். எனவே திமுக அரசு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். சொன்னதைச் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம் என்று வாக்குறுதி அளித்த தமிழினத் தலைவர் கலைஞரின் மகன் நான். கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

அப்படி நாங்கள் நிறைவேற்றுவது எல்லாம் மக்களுக்கு முழுமையாகச் சென்று சேருவதற்கு உள்ளாட்சி அமைப்புகளிலும் கழக வேட்பாளர்களும் கூட்டணி வேட்பாளர்களும் வெற்றி பெற்று பங்கெடுத்தாக வேண்டும். அதற்காகத்தான் வாக்குக் கேட்டு உங்கள் முன்னால் நிற்கிறேன். உதயசூரியன் - உங்களது இதய சூரியன் அதனை மறந்து விடாதீர்கள். எங்கள் கூட்டணிக்கட்சிகளின் சின்னங்களையும் மறவாதீர்.

உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர உங்களது பொன்னான வாக்குகளை வாரி வழங்குங்கள் என்று அன்போடு கேட்டுக் கொண்டு – இந்தப் பிரச்சார நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து உங்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பைப் பெற முடியவில்லை. அதற்குக் காரணம் உங்களுக்கே தெரியும். நிச்சயமாக, உறுதியாக நாம் மாபெரும் வெற்றியைப் பெற்று அந்த வெற்றியைச் சேலம் மாவட்டம் கொண்டாடும்போது அந்த வெற்றிவிழா நிகழ்ச்சிக்கு நானே நேரடியாக வருவேன் என்ற உறுதியை மாத்திரம் தெரிவித்து உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். நன்றி; வணக்கம்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Also Read: முதல்வரின் சமூகநீதி கூட்டமைப்பில் இணைய ஆர்வம் காட்டும் இந்திய தலைவர்கள் : வரிசை கட்டும் ஆதரவு பதில்கள்!