Tamilnadu

“மோடி ஆட்சியில் ஆளுநர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது.. RN.ரவி செய்தது மிகத் தவறானது”: என்.ராம் கண்டனம்!

“மக்களின் உணர்வை மதிக்காமல் ‘நீட்’ மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநரின் செயல் மிகத் தவறானது” என்று ‘இந்து’ என்.ராம் அவர்கள் “சன் நியூஸ் தொலைக்காட்சி” கேள்விக்களம் பகுதி நேர்காணலில் அளித்த பேட்டியில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘இந்து’ என்.ராம் அவர்கள் “சன் நியூஸ் தொலைக்காட்சி” கேள்விக்களம் பகுதிக்கு நேர்காணலில் அளித்த பேட்டி வருமாறு :-

நெறியாளர்: மாநில சுயாட்சி, மாநில உரிமையும் மேலோங்கி இருக்கக் கூடிய தமிழ்நாட்டில், சுயமரியாதை இயக்க உணர்வு, சமூகநீதி சார்ந்த சிந்தனை, மொழி உணர்ச்சி, மதச்சார்பற்ற தன்மை, ஜனநாயகம் இவற்றில் மக்களுக்கு இருக்கக்கூடிய அந்த உணர்வு வேரூன்றி இருப்பதினால், இந்த இடத்தில், இதற்கு மாறான ஒரு குழுவினர் மேலாதிக்கம் செய்ய முடியாது என்கிற ஒரு கருத்தை சொல்கிறீர்கள்.

நீட் தேர்வு விதிவிலக்கு வேண்டும் என்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவை, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்குப் பதிலாக, மீண்டும் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர்.

அந்த ஆளுநரை திரும்பப் பெறவேண்டும் என்று இன்றைக்குக்கூட தி.மு.க. எம்.பி.,க்கள் போராட்டம் செய்திருக்கிறார்கள். ஆளுநருடைய நடவடிக்கை - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதற்கும், ஆளுநருடைய செயலுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா? என்பதைத் தாண்டி, ஆளுநருடைய இந்த நடவடிக்கை என்பது, சட்டத்தின்பால்பட்டதா? மாநில உணர்வு அதற்கு எதிரானதா? இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

‘இந்து’ என்.ராம்: ஆளுநர் செய்தது மிகத்தவறானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஆட்சியை நடத்த வேண்டும்; ஆளுநர் அதற்கு ஒத்துழைப்புத் தரவேண்டும். ஆனால், இன்றைக்கு எதார்த்தம் என்னவென்றால், ஒன்றிய அரசு சொல்வதைத்தான், மாநில ஆளுநர்கள் கேட்கிறார்கள். சில ஆளுநர்கள் மென்மையாக நடந்துகொள்கிறார்கள்; சில ஆளுநர்கள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்.

தமிழ்நாடு அரசின் மசோதாவை திருப்பிஅனுப்பியதை - இவரே செய்தாரா? அல்லது ஒன்றிய அரசின் அழுத்தமா? என்பது தெரியவில்லை. இவருடைய கருத்துக்கு மாறுபாடு இருந்தால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப்போகலாமே!

ஆளுநர் செய்தது மிகத் தவறானது. காலதாமதம் தான் ஆகும். நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்கிற விவாதம் இப்பொழுது தேவையில்லை. ஆனால், மக்கள் மத்தியில் ஒரு பயம் இருக்கிறது; நீட் தேர்வு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்திற்கு இது தடையாக இருக்கிறது; சமூகநீதிக்கு எதிரானது என்கிற எண்ணம் இருப்பதினால், அதுகுறித்து பேசவேண்டும். அப்படியில்லாமல், உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது என்று சொல்வது சரியில்லை. மீண்டும் சொல்கிறேன், நீட் வேண்டுமா? வேண்டாமா? என்கின்ற பிரச்சினைக்கு நான் போகவில்லை.

ஆனால், மக்களின் உணர்வை மதிக்காமல், ஆளுநர் இப்படி செய்திருப்பது தவறான விஷயம்தான். ஆளுநர் அவராகவே இதை செய்தாரோ அல்லது ஒன்றிய அரசிடமிருந்து உத்தரவு வந்ததோ தெரியவில்லை. ஏனென்றால், எந்த மாநில ஆளுநரும் இன்றைக்கு சுதந்திரமாக செயல்பட முடியாது; அப்படி செயல்பட்டால், உடனே அவர் மாற்றப்படுவார்கள்.

இதற்கு முன்பு இருந்த ஆளுநர், மிகவும் மென்மையானவர். இன்றைய ஆளுநர் ரவியையும் நான் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவருடைய தனிப்பட்ட செயலை சொல்லவில்லை. மசோதாவை திருப்பி அனுப்பியது தவறானதுதான். ஓவர் ரீச் என்கின்ற வார்த்தை ஒன்று உண்டு. அரசமைப்புச் சட்டத்தை மீறி செய்கின்ற தன்மை இன்றைக்குப் பல மாநிலங்களில் இருக்கிறது. இவ்வாறு ‘இந்து’ என்.ராம் அவர்கள் கேள்விக் களம் பகுதிக்கு பதிலளித்தார்

Also Read: “தமிழர்களிடம் மதச்சார்பற்ற கலாச்சாரம் இருக்கிறது.. பாஜக சிந்தனை தமிழ்நாட்டை ஆளமுடியாது” : N.ராம் பேட்டி!