Tamilnadu

#UNIONBUDGET2022: 5 ஆண்டுகளில் 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.. பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

நாடாளுமன்றத்தில் 2022 - 2023ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றைய தினம் தொடங்கியடுது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நேற்று தொடங்கிய, இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து இன்று, 2022-23 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்றும் 5 ஆண்டுகளில் 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :-

நெடுஞ்சாலை

நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது.

போக்குவரத்து உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த 3 ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்.

நதி நீர் இணைப்பு

கிருஷ்ணா நதி - பெண்ணாறு - காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

காவிரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

கல்வி

நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள 5 கல்வி நிலையங்கள் உயர்சிறப்பு கல்வி நிலையங்களாக அறிவிக்கப்படும்.

உயர் சிறப்பு கல்வி நிறுவனங்களை மேம்படுத்த தலா ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒரு வகுப்புக்கு ஒரு கல்வி சேனல் என்ற வகையில், 200 டிவி சேனல்கள் புதிதாக உருவாக்கப்படும்.

பள்ளிகளில் கல்வி போதித்தலை மேம்படுத்துவதற்காக உயர்தர மின்னணு வழி கல்விமுறை அறிமுகப்படுத்தப்படும்.

டிஜிட்டல் முறையிலான கற்பித்தல் ஊக்குவிக்கப்படும்.

மின்சக்தி

மின்சார வாகனங்களின் பேட்டரிகளை மாற்றி கொள்வதற்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

நாடு முழுவதும் சூரிய மின்சக்தி உற்பத்திக்கு ரூ.19,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2030- ம் ஆண்டுக்குள் 280 ஜிகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை எட்டுவதே இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ்போர்ட் திட்டம்!

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் திட்டம் வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும்.

தபால் அலுவலக கணக்கிலிருந்து வங்கி கணக்குகள் ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தபால் துறையை வங்கிகள் துறையோடு ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

வருமான வரி

வருமான வரி கணக்கில் திருத்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக வரி செலுத்தியதாக ஒருவர் கருதினால், 2 ஆண்டுகள் திருத்தப்பட்ட வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்.

கூட்டுறவு நிறுவனங்கள் செலுத்தும் குறைந்தபட்ச மாற்று வரி விகிதம் 15% ஆக குறைக்கப்படும்.

TDS சலுகை

ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களும் TDS சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒன்றிய மற்றும் மாநில அரசு பணியாளர்களுக்கான TDS 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படும்.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா பங்குகள் விற்பனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

பெரும் நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12-ல் இருந்து 7% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி 7.5%-ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனிநபர் வருமான வரி

நடப்பாண்டுக்கான தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. அது குறித்தான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை

இதனால் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாகவே தொடரவுள்ளது.

தனிநபர் வருமான வரியில் மாற்றமில்லாதது, நடுத்தர மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

Also Read: சீனாவில் தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ்... தனி ஒருவராக களமிறங்கும் ஜம்மு காஷ்மீர் வீரர்!