Tamilnadu

350 கிலோ ரசாயனம் கலந்த பட்டாணி.. அதிரடியாக பறிமுதல் செய்த அதிகாரிகள் : கோயம்பேடு சந்தையில் நடந்தது என்ன?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் முறைகேடாக ரசாயன சாயம் கலந்து காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

மேலும், அதிகளவு பல வண்ணசாயங்கள் கலந்த பச்சை பட்டாணி, பட்டர் பீன்ஸ், அப்பளங்கள் கிலோ கணக்கில் வைக்கப்பட்டிருந்ததையும்,பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் சதீஷ், " முறைகேடாக இரசாயன சாயம் கலந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பச்சை பட்டாணி சுமார் 350 கிலோவும், குறிப்பிட்ட அளவு பட்டர் பீன்ஸும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பான் மசாலா, குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளோம். அதேபோல இரசாயன சாயங்கள் சேர்க்கப்பட்ட அப்பளங்களையும் கைப்பற்றியுள்ளோம். இவற்றையெல்லாம் தொடர்ந்து சாப்பிட்டால் கேன்சர் ஏற்படும் ஆபத்து உள்ளது.

இதனை விற்பனை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதல்கட்டமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவற்றை விற்பனை செய்வோர் மனசாட்சியுடன் நடந்து கொண்டால் தான் கலப்பட உணவுப்பொருள் பிரச்சனையை முழுமையாக தடுக்க முடியும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: PUBG விளையாடிய இளைஞருக்கு அரிவாள் வெட்டு - ஆத்திரத்தில் முதியவர் செய்த விபரீதம் : நடந்தது என்ன?