Tamilnadu

கடத்தப்பட்ட குழந்தையை 3 மணி நேரத்தில் மீட்ட போலிஸ்.. செங்கல்பட்டு TO சென்ட்ரல் - நடந்தது என்ன?

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த் குமார். இவர் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் தங்கிக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவிக்குக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் அவரது குழந்தை நேற்று காணாமல் போனது. இது குறித்து ஹேமந்த் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

குழந்தை பிறந்து ஒருமாதமே ஆனதால் புகைப்படம் எதுவும் பெற்றோரிடம் இல்லை. இதனால் குழந்தையின் அங்க அடையாளங்களைக் கொண்டு போலிஸார் சென்னை உட்படச் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள ரயில்நிலையங்களில் தேடிவந்தனர்.

இந்நிலையல் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மைசூர் விரைவு ரயிலில் போலிஸார் சோதனை செய்தபோது தம்பதி ஒருவரிடம் ஆண் குழந்தை இருந்தது. இவர்கள் மீது சந்தேகமடைந்த போலிஸார் விசாரணை செய்தபோது கடத்தி வரப்பட்ட குழந்தை என்று தெரிந்தது.

மேலும் அவர்களிடம் விசாரணை செய்தபோது தம்பதியினர் பெங்களூருவரைச் சேர்ந்த மஞ்சு, கோமலா என தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்ட போலிஸார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தை கடத்தப்பட்டு 3 மணி நேரத்திலேயே புகைப்படமே இல்லாமல் மீட்ட போலிஸாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Also Read: சந்தேகப்பட்ட கணவன்... 13 வயது மகளை தீயிட்டுக் கொளுத்திய பெண்... ‘பகீர்’ சம்பவம் - நடந்தது என்ன?