Tamilnadu
போலி கையெழுத்து போட்டு முறைகேடு.. புகார் கொடுத்த அரசு ஊழியருக்கு கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க நிர்வாகி!
தன்னுடைய கையெழுத்தைப் போலியாக கையெழுத்திட்டு அங்கீகாரம் இல்லாத வீட்டு மனையை பதிவு செய்ததாக அ.தி.மு.க நகர செயலாளர் விவேகானந்தன் மீது புஞ்சை புகலூர் பேரூராட்சி இளநிலை உதவியாளராக பணியாற்றிய கருப்பையா அளித்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரூரில் அ.தி.மு.க நகர செயலாளர் கொலை மிரட்டல் விடுப்பதாக அரசு ஊழியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் நங்கவரம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் கருப்பையா. இவர் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 2017ஆம் ஆண்டு முதல் 2020 வரை புஞ்சை புகலூர் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இவர் தனது பணியான கட்டிட உரிமம் வழங்குதல், சொத்து வரி நிர்ணயம் செய்தல், ஆய்வு செய்தல், மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்க களப்பணி ஆய்வு செய்து சட்டத்திற்கு உட்பட்டு இருப்பின் அதனை செயல்படுவதற்கு செயல் அலுவலருக்கு பரிந்துரை செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார்.
இந்நிலையில் புகலூர் நகர அ.தி.மு.க செயலாளராக உள்ள விவேகானந்தன் என்பவர் கடந்த 2009ஆம் ஆண்டு சுப்பு கார்டன் என்ற பெயரில் உள்ள மனைகளுக்கு தடையின்மை சான்று வழங்கக் கோரி விண்ணப்பித்து இருந்தார்.
உரிய முறையில் அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு தடையின்மை சான்று வழங்க இளநிலை உதவியாளராக பணியாற்றிய கருப்பையா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், அங்கு பணியாற்றிய கருப்பையா நங்கவரம் பேரூராட்சிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.
பணிமாற்றம் செய்யப்பட்ட பிறகு தன்னுடைய கையெழுத்தை போலியாக கையெப்பமிட்டு தடையின்மை சான்றிதழ் பெற்று கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அ.தி.மு.க நகர செயலாளர் விவேகானந்தன், அவரது மனைவி லலிதா, மாமியார் சரோஜா, ஜாகிர் உசேன், கண்ணன் ஆகிய ஐந்து நபர்கள் பெயரில் பத்திர பதிவு செய்துள்ளனர்.
இந்த மோசடியான பத்திரப்பதிவு காரணமாக பேரூராட்சிக்கு 15 லட்சத்து 58 ஆயிரத்து 946 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என உதவி இயக்குனர் பேரூராட்சிகள் திண்டுக்கல் மண்டலத்திற்கு கருப்பையா ஏற்கனவே புகாராக தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த வருடம் ஏப்ரல் மாதம், தடையின்மை சான்று வழங்கப்படாத சுப்பு கார்டன் இடம் தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலையீடு காரணமாக போலிஸார் மனுவை கிடப்பில் போட்டிருந்தனர்.
ஆட்சி மாற்றம் காரணமாக கிடப்பில் போடப்பட்ட இந்த மனு தொடர்பாக மீண்டும் போலிஸார் கருப்பையாவிடம் விசாரணை நடத்தினர். இதில் போலியாக கையொப்பமிட்டு தடையில்லாச் சான்று பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலிஸார் அ.தி.மு.க நகர செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து நகர செயலாளராக உள்ள விவேகானந்தனிடம் போலிஸார் இன்று காலை விசாரணைக்கு சென்றபோது அ.தி.மு.கவினர் காவல்துறையினரை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே அ.தி.மு.க நகர செயலாளர் விவேகானந்தன் மற்றும் சிலர் அவர்கள் வீட்டுக்குச் சென்று மோசடியாக தயாரிக்கப்பட்டு ஆவணங்களை சரி செய்து தருமாறும் இல்லையென்றால் உன்னை உயிரோடு விடமாட்டோம் எனவும் மிரட்டல் விடுத்ததாக பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அரசு ஊழியர் கருப்பையா புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் போலியாக கையெழுத்திட்டு அங்கீகாரம் இல்லாத வீட்டு மனையை பதிவு செய்தது மட்டுமல்லாமல் அரசு ஊழியரை கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!