Tamilnadu
மக்கள் நல்வாழ்வுத்துறையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் ‘திராவிட மாடல்’ - 'The Hindu' நாளேடு கட்டுரை!
மக்கள் நல்வாழ்வுத்துறையில், தமிழ்நாடு பின்பற்றும் திராவிட மாடல் நடைமுறைகளைப் பின்பற்றி இந்தியா முழுவதும் சமூக முன்னேற்றத்தை எளிதாக்கலாம் என்று ‘தி இந்து’ ஆங்கில நாளேடு கட்டுரை வெளியிட்டுள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் துறை துணை பேராசிரியர் சக்திராஜன் ராமநாதன், தமிழ்நாடுபன்னோக்கு மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் கூடுதல் பேராசிரியர் சுந்தரேசன் செல்லமுத்து ஆகியோர் இணைந்து THE DRAVIDIANMODEL OF PUBLIC HEALTH என்ற தலைப்பில் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் 27.1.22 அன்று கட்டுரை ஒன்றை எழுதியுள்ளனர். அதன் முக்கியப் பகுதிகள் இங்கே.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை உறுதிப்படுத்தும் சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு நாட்டின் சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல்கல் என்று ‘தி இந்து’, ஆங்கில நாளேட்டில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவருடைய தகுதி என்பதற்கான குறுகிய வரையறைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும். தகுதி என்பதை சமூகரீதியாக வரையறுக்க வேண்டும். நாம் கடைப்பிடிக்க வேண்டிய சமத்துவம் எனும் சமூக மதிப்பீட்டை மேம்படுத்தும் ஒன்றாக தகுதி என்பது இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் திராவிட அரசுகள் ‘தகுதி’ மற்றும் அதன் சமூக தாக்கங்கள் பற்றிய பரந்த புரிதலைக் கொண்டிருந்தன என்றும் கூறப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்களுக்கு முதுகலை மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம், அரசு மருத்துவமனைகளில் மூன்றாம் நிலை சுகாதார சேவையை வழங்குவதில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றும், இதன் விளைவாக மாநிலத்தில் பொது சுகாதார உள்கட்டமைப்பு விரிவடைந்தது என்றும், ‘தி இந்து’ நாளேடு பாராட்டியுள்ளது.
இந்த முற்போக்கான சீர்திருத்தம், 40 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் பற்றாக்குறையாக இருந்த மகளிர் மருத்துவம், மயக்க மருந்து, பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மற்றும் எலும்பியல் போன்ற பல துறைகளில் நிபுணர்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வழிவகுத்தது என்றும், ‘திஇந்து’ நாளேட்டின் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு, மல்டி ஸ்பெஷாலிட்டி நிபுணர்கள் கிடைப்பதில் நிலையான உயர்வுக்கு வழிவகுத்தது. கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பசுகாதார நிலையங்களில் மூன்றாண்டுகள் பணியாற்றுவது, இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பெறுவதற்கு பட்டதாரிகளுக்கான தகுதி அளவுகோலாக இருப்பதால், இளம் MBBS பட்டதாரிகளை கிராமப்புறங்களில் பணியாற்ற ஊக்குவித்தது.
இதன் விளைவாக, அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறை ஏற்படவில்லை என்றும், மக்கள் தங்கள் வீட்டு வாசலில் சிறந்த சுகாதார வசதிகளைப் பெற்றனர் என்றும் அது குறிப்பிடப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி முதுகலைப் பட்டதாரி அல்லது சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைப் பெறுபவர்கள் ஓய்வு பெறும் வரை அரசுப் பணியில் இருப்பார்கள் என்பதை உறுதி செய்வதற்காக, இந்த அரசு மருத்துவர்களுக்கான தனித்துவமான ஓய்வுப் பத்திரத்தை வெளியிட்டதாகவும், இந்தச் சட்டப்பிணைப்பு, பெரும்பான்மையான வல்லுநர்கள் தங்கள் பணிக்காலம் முழுவதும் அரசுத் துறையில் தங்கள் சேவையைத் தொடர்வதை உறுதி செய்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மேல்நிலைப் பத்திரத்தின் முக்கிய நோக்கம் தனியார்துறைக்கு அல்லது வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுப்பதாகும். இந்த தனித்துவமான திட்டம் நாட்டில் எங்கும் இல்லை என்றும் அந்த கட்டுரையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, மக்கள் நல்வாழ்வுத்துறையில், தமிழ்நாடு அரசு பின்பற்றும் திராவிட மாடல் நடைமுறைகளைப் பின்பற்றி இந்தியா முழுவதும் சமூக முன்னேற்றத்தை எளிதாக்கலாம். இவ்வாறு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: முரசொலி
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!