Tamilnadu
“மகனை அடித்துக் கொன்று ரத்தம் சொட்டச் சொட்ட சைக்கிளில் வைத்து..” : மதுரையில் பயங்கரம் - நடந்தது என்ன?
மதுரையில் குடிபோதையில் தகராறு செய்த மகனை பெற்றோர் அடித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மதுரை ஆரப்பாளையம் அருகே வைகையாற்றுக்குள் பாதி எரிந்த நிலையில் இளைஞர் உடல் கிடந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததை அடுத்து கரிமேடு போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இறந்தது யார் என்று தெரியாத நிலையில், முன்பகையாலோ அல்லது ரௌடி கும்பலினாலோ இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்தனர். விசாரணையில் இறந்தது ஆரப்பாளையத்தை சேர்ந்த மணிமாறன் (45) எனத் தெரியவந்தது.
தொடர்ந்து, அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது மணிமாறனின் பெற்றோர் முருகேசன் (75), கிருஷ்ணவேணி (65) ஆகியோர் ஒரு உடலை சாக்கில் வைத்து கட்டி ரத்தம் சொட்டச் சொட்ட சைக்கிள் பின்புறத்தில் வைத்து துாக்கிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸாரின் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போலிஸார் கூறுகையில், “கொலையுண்ட மணிமாறனுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
மணிமாறன் கருத்து வேறுபாடால் மனைவியை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்தார். தினமும் குடித்துவிட்டு பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு போதையில் இருந்த அவர் பெற்றோருடன் வாக்குவாதம் செய்தார்.
ஆத்திரத்தில் விறகு கட்டையால் தந்தை முருகேசன் அடித்ததில் மணிமாறன் மயங்கி விழுந்தார். பின் அவர் மனைவியுடன் மகன் உடலை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு காமராஜர் மேம்பாலம் அருகே வைகை ஆற்றுக்குள் போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து வழக்கம்போல் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. கணவனும், மனைவியும் சைக்கிளில் உடலை கொண்டு சென்றது தொடர்பாக அப்பகுதி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.
குடிபோதையில் தகராறு செய்த மகனை பெற்றோரே அடித்துக் கொன்று எரித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!