Tamilnadu

நீட் தேர்வில் வெற்றி... அரசுப் பள்ளி மாணவருக்கு சீட்டை விட்டுக்கொடுத்த 61 வயது ஓய்வு பெற்ற ஆசிரியர்!

தருமபுரியை சேர்ந்த 61 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவ கவுன்சிலிங்கில் கல்லூரியை தேர்வு செய்யாமல் பிற அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வாய்ப்பை விட்டுக்கொடுத்துள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு, இன்று கவுன்சிலிங் துவங்கியது.

தருமபுரி பாப்பரம்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான 61 வயதான சிவபிரகாசம், அரசுப் பள்ளிகளில் நீட் பயிற்சி அளித்து வருகிறார்.

இவர் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றுவதற்காக கடந்தாண்டு நீட் தேர்வு எழுதி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் படி தரவரிசையில் 249-வது இடத்தைப் பெற்ற அவர் இன்று கலந்தாய்வில் பங்கேற்க சென்னை வந்தார்.

ஆனால் அவர் பியூசி படித்திருந்ததால், கலந்தாய்வில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருப்பதால், அவரால் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை உருவானது.

எனினும், உயர் அலுவலர்களுக்கு கடிதம் எழுதினால் பரிசீலிப்பார்கள் என அதிகாரிகள் கூறிய நிலையில், தனது முடிவை மாற்றிக்கொண்ட சிவபிரகாசம் கலந்தாய்வில் இருந்து விலகுவதாகத் தெரிவித்து, கல்லூரியை தேர்வு செய்யவில்லை. இதனால், அரசு பள்ளி மாணவர் ஒருவருக்கு அந்த இடம் கிடைக்கவுள்ளது.

இதுதொடர்பாக பேசிய அவர், “மருத்துவராக வேண்டும் என்பது எனது சிறுவயது ஆசை. வயது உச்சவரம்பு இல்லாததால் நீட் தேர்வு எழுதினேன். வெற்றியும் பெற்றிருக்கிறேன். நீண்ட காலம் மருத்துவ சேவையாற்ற இயலாது என்பதால் எனது மகன் எதிர்க்கிறார். எனக்கான வாய்ப்பை மற்றொரு மாணவருக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவபிரகாசத்தின் மாணவர் ஒருவர் தரவரிசையில் 5ஆவது இடம்பிடித்து தற்போதைய கலந்தாய்வில் பங்கேற்கிறார்.

Also Read: ”இதற்காகத்தான் நீட் விலக்கு கேட்கிறோம்” - நேரலையில் பிரதமரிடம் வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!