Tamilnadu

“வேலுநாச்சியார் யார்? வ.உ.சி யார்? என்று கேட்பவர்களே..!” : ஒன்றிய அரசுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர்!

தி.மு.க மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குடியரசு நாளில், டெல்லியில் அனைத்து மாநிலங்களும் பங்குபெறும் வாகன ஊர்தி ஊர்வலம் நடக்கும். அனைத்து மாநில ஊர்திகளும் இடம் பெறும். இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்பதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை.

வீரமங்கை வேலுநாச்சியாரை -

மானம் காத்த மருது பாண்டியரை -

மகாகவி பாரதியாரை -

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரை யார் என்று கேட்பதற்கு இவர்கள் யார்?

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக முதல் குரல் எழுப்பிய மண் தென்னாடு. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு. அவர்கள் சொல்லும் சிப்பாய் கலகத்துக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாக - 1806 ஆம் ஆண்டே வேலூரில் புரட்சி நடந்து விட்டது.

அதற்கும் முன்னால்

* நெல்கட்டஞ்செவலில் பூலித்தேவன்

* சிவகங்கையில் வேலுநாச்சியார்

* பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன்

* மருது சகோதரர்கள்

* ராமநாதபுரத்தில் மயிலப்பன்

* கான்சாகிப் மருதநாயகம்

* தளபதி சுந்தரலிங்கம்

* தீரன் சின்னமலை

* அழகுமுத்துகோன்

* சிவகிரியில் மாப்பிள்ளை வன்னியன்

* பழனியில் கோபால் நாயக்கர்

- இப்படி பலரும் போராடிய மண் இந்த தமிழ்நாடு.

வேலுநாச்சியார் யார்? கட்டபொம்மன் - மருதுபாண்டியர் யார்? வ.உ.சிதம்பரனார் யார் என்று கேட்பவர்களே! நீங்கள் முதலில் பிரிட்டிஷ் அதிகாரிகள் எழுதிய வரலாறுகளை படியுங்கள்!

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பிரகடனம் எழுதி கோவில் சுவரில் ஒட்டி வைத்த மாவீரன் மருதுபாண்டியன்.

'பேரரசர்களுக்கு பணியாளரும் -

இழிபிறப்பான பரங்கியருக்கு பரம எதிரியுமான மருதுபாண்டியர்' என்று கையெழுத்துப் போட்டு வைத்தவன் மருது பாண்டியன்.

வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்குமேடைக்குச் சென்ற போது அஞ்சா நெஞ்சத்துடன் சென்றதாகவும், தன்னைக் காட்டிக் கொடுத்தவர்களைப் பார்த்து சிரித்ததாகவும், போரில் இறந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதாகவும் பிரிட்டிஷ் அதிகாரி பானர்மேன் எழுதி இருக்கிறார்.

'வ.உ.சிதம்பரனாரின் பேச்சைக் கேட்டால் பிணம் கூட எழும்' என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் எழுதி வைத்துள்ளார்கள். இவர் சாதாரண ஆள் அல்ல, பயரங்கரமானவர் என்று இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி எழுதி இருக்கிறார்.

அத்தகைய சிதம்பரனாரை, 'கப்பலோட்டிய தொழிலதிபர் தானே' என்று ஒரு டெல்லி அதிகாரி கேட்டதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாருக்கு எதிராகக் கப்பல் ஓட்டினார்? பிரிட்டிஷாருக்கு எதிராகத் தானே?

அரசியல் ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் பிரிட்டிஷ் அரசை பலவீனப்படுத்த முயன்ற முதல் சுதேசி அல்லவா சிதம்பரனார்?

இந்தப் புரிதல் கூட இல்லாதவர்கள் தமிழ்நாட்டை, தமிழை, தமிழர்களின் உணர்வை எப்படி புரிந்து கொள்வார்கள்?

1938 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்ட காலம் முதல் -

2021 ஆம் ஆண்டு குடியரசு தின விழா வரையில் அவர்களுக்கு தமிழ்நாட்டை புரியவில்லை என்று தான் சொல்ல முடியும்.

'இந்தியை பெரியார் ஈ.வெ.ராவும் சோமசுந்தரபாரதியும் என இரண்டு பேர் தான் எதிர்க்கிறார்கள்' என்று சட்டமன்றத்தில் சொன்னார் அன்றைய முதல்வர் இராஜாஜி.

'எதிர்ப்பவர்களாவது இரண்டு பேர், ஆதரிப்பது நீங்கள் ஒருவர்தானே' என்று உடனேயே திருப்பிக் கேட்டார் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்.

அத்தகைய இராஜாஜி அவர்களே இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஆம் ஆண்டு பேசியாக வேண்டியது இருந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இராஜாஜிக்கே தமிழர்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கு 25 ஆண்டுகள் ஆனது என்றால் இன்றைய பா.ஜ.கவினருக்கு எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை.” என உரையாற்றினார்.

Also Read: 1965 மொழிப்போர் காலத்தில் கோவாவில் என்ன செய்து கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர் ? : உண்மையை உடைத்த ஆ.ராசா