Tamilnadu

பிலிப்பைன்ஸில் பலியான மாணவர் உடல் முதல்வரின் நடவடிக்கையால் பெற்றோரிடம் ஒப்படைப்பு.. கண்ணீர் மல்க நன்றி!

பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார், உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர் கண்ணீர் மல்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள இராசிங்காபுரத்தை சேர்ந்த பாலசேகரனின் மகன் சஷ்டிகுமார். பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வந்த அவர் கடந்த ஜனவரி 15-ஆம் ஆற்றில் மூழ்கி பலியானார். இவரது விசா முடிவடைந்ததால் உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து மாணவர் சஷ்டிகுமாரின் உடலை சொந்த ஊர் கொண்டு வரவேண்டும் என அவரது பெற்றோர் தேனி மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் தமிழக அரசின் முழு செலவில் சஷ்டி குமாரின் உடல் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை கொண்டு வரப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.‌

அதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான ராசிங்காபுரத்திற்கு எடுத்து வரப்பட்ட அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் தி.மு.க தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் ஆகியோரும் மாணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.

அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாணவரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

மாணவனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் நன்றி தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இறந்த தனது மகனை சொந்த ஊருக்கு வர ஏற்பாடு செய்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மாணவரின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.