Tamilnadu

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பு... அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் ரெய்டு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அ.தி.மு.க பிரமுகர் ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள நம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சியின் தலைவராக கடந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை இருந்தவர் அ.தி.மு.கவைச் சேர்ந்த கே.வி.என்.ஜெயராமன். இவர் தற்போது பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளராக இருந்து வருகிறார்.

ஜெயராமன் பேரூராட்சி தலைவராக இருந்த காலத்தில் வருமானத்தை விட அதிகமாக ரூ.1.45 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அந்த சொத்து மற்றும் நகைகள் அவரது பெயரிலும், மனைவி பெயரிலும் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் பேரூராட்சி தலைவர் கே.வி.என்.ஜெயராமன் மற்றும் அவருடைய மனைவி கீர்த்தி உள்ளிட்டோர் மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலிஸார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் தாமோதரன் நகரில் உள்ள கே.வி.என்.ஜெயராமன் வீட்டில் இன்று, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வரும் ஜெயராமனின் இல்லத்திற்கு வெளியே அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் திரளாக கூடி, லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டுள்ளனர்.

தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்றதும் கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல்கள் தோண்டி துருவப்பட்டு வருகின்றன. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டும் நடைபெற்று முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இந்நிலையில், கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த கே.வி.என்.ஜெயராமன் மற்றும் அவரது மனைவி மீது கோவை லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.