Tamilnadu

“தம்பி.. ஸ்டாலின் பேசுறேன்..” : இன்னுயிர் காப்போம் திட்டத்தால் காப்பாற்றப்பட்ட சிறுவனுடன் பேசிய முதல்வர்!

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவை “இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் உயிர்காக்கப்பட்ட சிறுவன் சு.வர்ஷாந்த் - அவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அலைபேசி மூலம் கலந்துரையாடி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

நாமக்கல் மாவட்டம், என்.புதுப்பட்டி, வசந்தபுரம் அருகில் உள்ள குப்பம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி அவர்களது மகன் வர்ஷாந்த் (13), 13.1.2022 அன்று பொங்கல் திருநாளுக்கு பயன்படுத்தும் பூலப்பூவை விற்றுவிட்டு, தனது தந்தை, தாய் ஆகியோருடன் இரண்டு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, எதிரில் வந்த இரு சக்கர வாகனம் மோதி இரவு 7.00 மணியளவில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் தாய், தந்தை இருவருக்கும் பாதிப்பு இல்லை. விபத்தில் சிறுவன் வர்ஷாந்த்க்கு தலையில் காயம் ஏற்பட்டது. தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இரவு 7.50 மணியளவில் சேர்க்கப்பட்டார். இந்த மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான ”இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டார்கள். சிறுவன் வர்ஷாந்த்க்கு தலையில் அடிபட்டதால், ICU வில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தலையில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது.

12 மணி நேரம் கழித்து மூளையில் இரத்த கசிவு அதே அளவில் உள்ளதா, அதிகரித்துள்ளதா என்பதற்காக மீண்டும் CT ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இரத்த கசிவும், மூளை அழுத்தமும் அதிகமானதால் அன்றே நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் (நியூரோ சர்ஜன்) மருத்துவர்.பாலசுப்பிரமணியன் , மருத்துவர்.ஷியாம்சுந்தர்உள்ளிட்ட குழுவினர் மண்டை ஓட்டை திறந்து, அறுவை சிகிச்சை செய்தார். இரத்த கசிவு அகற்றப்பட்டது.

விபத்தில் சிக்கிய சிறுவன் வர்ஷாந்துக்கு உடனடியாக சிகிச்சை, பரிசோதனை அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் உயிர் காக்கப்பட்டார். தற்போது செல்வன் வர்ஷாந்த் தெளிவாக நல்ல நிலையில் உள்ளார். இவர் சிகிச்சை முடித்து தற்போது பொட்டிரெட்டிபட்டி மண்கரடு பகுதியில் உறவினர் வீட்டில் உள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவை “இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் உயிர்காக்கப்பட்ட சிறுவன் சு.வர்ஷாந்த் - அவர்களுடன் அலைபேசி மூலம் கலந்துரையாடி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது சிறுவனிடம் “தம்பி ஸ்டாலின் பேசுறேன். நல்லாயிருக்கியா, வலி இருக்குதா. தைரியமா இரு” என நம்பிக்கை கூறி எப்படி விபத்து ஏற்பட்டது என்றும், மருந்துகள் கொடுத்திருக்கிறாங்களா என்றும் கேட்டறிந்தார். ஏதேனும் வேண்டுமென்றால் எம்.பி இராஜேஸிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அப்போது முதலமைச்சர் அவர்களிடம் பேசிய சிறுவனின் தாயார் அவர்கள் தங்களது மகனை காப்பாற்றிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங். இ.ஆ.ப., பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் ஆகியோர் சிறுவன் சு.வர்ஷாந்த் உடன் இருந்தனர்.

பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் சிறுவன் வர்ஷாந்துக்கு பழங்கள், சத்துமிகுந்த உணவு பொருட்களை வழங்கினார்.

சிகிச்சை குறித்துப் பேசிய மருத்துவர், சாலை விபத்தில் பாதிக்கப்படக்கூடிய ஏழை நோயாளிகளுக்கு இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம் - மிகப் பெரிய நன்மை பயக்கும். மிகப்பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் இத்திட்டத்தில் அனுமதி அளித்து திட்டத்தை வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Also Read: மதுரை மாவட்டத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள்.. அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!