Tamilnadu
“என்னிடம் விவாதிக்கத் தயாரா? - இல்லாவிடில் மன்னிப்பு கேட்க வேண்டும்”: EPS-க்கு அமைச்சர் சக்கரபாணி சவால்!
“ஒட்டுமொத்தமாகக் கொள்ளையடித்துவிட்டு அபாண்டமாக ஆதார மற்ற குற்றச்சாட்டைக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகுப்புக் கொள்முதல் குறித்து என்னிடம் விவாதிக்கத் தயாரா?” என்று உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கை வருமாறு:
துரோகத்திற்கும் நன்றிகொன்ற செயலுக்கும் பெயர்போன எடப்பாடி பழனிச்சாமி, தான் திருடி பிறரை நம்பான் என்ற பழமொழிக்கேற்ப, தன் ஆட்சிக் காலத்தில் கோடி கோடியாய்க் கொள்ளையடித்த அயோக்கியத் தனத்தை நினைத்துக் கொண்டு பொங்கல் தொகுப்பு கொள்முதலில் ரூ.500 கோடி ஊழல் என்றும் தரமற்ற பொருள்கள் வழங்கப்பட்டதாகவும் நாக்கூசாமல் அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
2.15 கோடி அட்டைதாரர்களுக்கு குறுகிய காலத்தில் 21 வகையான பொருள்கள் தரமாக வழங்க வேண்டும் என்பதற்காக உரிய முறையில் விலைப்புள்ளி கோரப்பட்டுக் குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது. 27.12.2021 அன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களும் நானும் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரும் காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மண்டல இணைப் பதிவாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்கள் கூட்டத்தை நடத்தி அனைவருக்கும் தரமான பொருள்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
நியாய விலைக் கடைகளில் முதல்வர் நேரடி ஆய்வு!
நான் 11.01.2022 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதே சில இடங்களில் வேண்டுமென்றே அ.தி.மு.க. வினர் பொய்ப் பிரச்சாரம் செய்ததை ஆதாரத்துடன் சுட்டிக்காண்பித்தேன். முதலமைச்சர் அவர்களே சென்னையில் பொதுவிநியோகத் திட்ட அங்காடிகளுக்குச் சென்று பொருள்களின் தரத்தையும் விநியோகத்தையும் ஆய்வு செய்தார்.
சில இடங்களில் தரமற்ற பொருள்கள் வழங்கப்பட்டதை மாற்றிக் கொடுத்ததோடு அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. தவறுக்கு இடம் கொடுக்காமல் வெளிப்படையாகவும் தவறு செய்தால் உரிய நடவடிக்கையும், எடுக்கும் ஆட்சிதான் முதலமைச்சர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு.
எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் கடந்தபொங்கலுக்கு 20 கிராம் முந்திரிப் பருப்பு, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய 45 கிராம் பொருள்களுக்கு இவர்கள் வழங்கிய தொகை ரூ. 45/- ஆனால் இந்த பொங்கலுக்கு எங்கள் ஆட்சியில் 50 கிராம் முந்திரி பருப்பு 50 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய் ஆகிய 110 கிராம் பொருள்களுக்கு வழங்கிய தொகை ரூ. 62/- இந்த மூன்று பொருள்களில் மட்டுமே ஒரு தொகுப்புக்கு ரூ.48/- குறைவாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இவர்கள் ஆட்சியில் இந்த மூன்று பொருள்கள் கொள்முதலில் மட்டும் இவ்வளவு அதிகமாக ஏன் செலவழித்தார்கள் என்பதற்குப் பதில் கூற வக்கின்றி வசைபாடியுள்ளார்.
ஒப்பந்தப் புள்ளியில் வெளிப்படையான நடைமுறை! கடந்த ஆட்சியின் இறுதியில் பருப்புக்கு கிலோ ஒன்றிற்கு ரூ.120.50 என்ற விலையில் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து விட்டு, நாங்கள் கிலோ ரூ.78 முதல் ரூ.86 வரையிலான விலையில் இறுதி செய்து பருப்பு கொள்முதல் செய்தோம். தி.மு கழக ஆட்சியில் ஒப்பந்தப்புள்ளி கோருவது எளிமையாக்கப்பட்டுப் பலரும் கலந்து கொண்டு அவர்கள் கொடுத்த விலைப்புள்ளியில் குறைந்தவற்றிற்கு கொள் முதல் ஆணை வழங்கப்படும் வெளிப்படையான நடைமுறை கொண்டுவரப்பட்டதால், இதில் மட்டும் ஒருமாதத்திற்கே ஒரு கொள்முதலில் ரூ.74.75 கோடி எங்கள் அரசால் மீதப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னிப்பு கேட்க வேண்டும்!
மேற்குறிப்பிட்ட இரண்டு கொள் முதல்களில் மட்டும் இரண்டு மாதத்திற்கே ஒரு துறையில் மட்டுமே இவ்வளவு பணத்தை நாங்கள் மீதப்படுத்தி இருக்கிறோம் என்றால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராயிருந்த 51 மாத காலத்தில் எல்லாத் துறைகளிலும் சேர்த்து எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்?
ஒட்டு மொத்தமாக கொள்ளையடித்து விட்டு அபாண்டமான ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறியுள்ள எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல் பற்றி என்னுடன் விவாதிக்கத் தயாராயுள்ளாரா? இல்லாவிடில் இவர் தனது தவறான குற்றச்சாட்டிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!