கோப்புப்படம்
Tamilnadu

'600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்' - பரபரப்புத் தகவல்கள்!

தர்மபுரி மாவட்ட மோளையானூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த வழக்கில் "தமிழக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது பதவி காலத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் சொத்து சேர்த்துள்ளார்.

சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பணிகளுக்கான டெண்டர்களை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கியுள்ளார். அதில் டெண்டர் வெளிப்படை சட்டத்தின் கீழ் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை. தனது குடும்பத்தார் பெயரில் நிலங்கள் கட்டிடங்கள் மருத்துவமனைகள் என 600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளார்..

ஆந்திரா கர்நாடகா மாநிலங்களிலும் அவரது பினாமி பெயர்களிலும் சொத்துகள் உள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தலின் போது, கே.பி.அன்பழகன் குறிப்பிட்ட சொத்துக்களின் மதிப்பு 53 லட்சத்து 56 ஆயிரத்து 889 ரூபாய். ஆனால் 2011 தேர்தலில் 26 கோடியே 81 லட்சத்து 30 ஆயிரத்து 790 ரூபாய் என்று சுட்டிக்காட்டி உள்ளார். தேர்தல் ஆணைய படிவத்தில் சொத்துக்களை மறைத்து உள்ளார்.

எனவே முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்ய கோரி லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸாரிடம் புகார் அளித்தேன், இதுவரை எந்த நடவடிக்கை இல்லை" என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, புகாரில் அடிப்படை முகாந்திரம் உள்ளதாகவும், ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Also Read: அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. விசாரணை வளையத்தில் கே.பி.அன்பழகன்!