Tamilnadu
"பச்சைப் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் ஜெயக்குமார்": ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம்!
முதலமைச்ர் மு.க.ஸ்டாலினை இந்தியத் துணைக் கண்டமே பாராட்டி வருவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பொய்யினை புனைந்து அறிக்கையாக வெளியிட்டுள்ளதாக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆர்.எ.ஸ்பாரதி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு:-
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 105 பிறந்த நாள் விழா தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருந்தன்மையோடும் - வரலாற்றுச் சான்றுகளோடும் எம்.ஜி.ஆருக்கும், கலைஞருக்கும் இருந்த கலையுலக நட்பு குறித்து வெளியிட்ட அறிக்கையை அனைவரும் குறிப்பாக, அ.தி.மு.க.வில் உள்ள அடிமட்டத் தொண்டர்களும் பாராட்டியதை தாங்கிக் கொள்ள முடியாமல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொய்யினை புனைந்து அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.
மேலும், முத்தமிழறிஞர் கலைஞர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பற்றியும் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார் ஜெயக்குமார். தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய வரலாற்றையும் - எம்.ஜி.ஆருக்கும் தளபதி அவர்களுக்கும் இருந்த உறவு எத்தகையது என்பது ஜெயக்குமார் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், எம்.ஜி.ஆர். தி.மு.கழகத்தில் இருந்தபோதோ அல்லது எம்.ஜி.ஆர். புதிய கட்சி தொடங்கியபோதோ, ஜெயக்குமார் எங்கே இருந்தார் என்பது அ.தி.மு.க.வின் தொடக்கக் கால தொண்டர்களுக்குத் தெரியும்.
கழகத் தலைவர் தளபதி அவர்கள், கோபாலபுரத்தில் தனது இளமைப் பருவத்தில், ‘இளைஞர் தி.மு.க.’ தொடங்கிய காலந்தொட்டு, அறிஞர் அண்ணா - எம்.ஜி.ஆர். போன்றவர்களின் பாராட்டைப் பெற்றவர். குறிப்பாக, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில், சென்னையிலிருந்து, “அண்ணா சுடர்’’ ஏந்தி, ஓட்டமாகவே காஞ்சிபுரம் மாநாட்டு மேடையில் முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், அன்றைய தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர். ஆகியோரிடம் ஒப்படைத்து, அவர்களின் பாராட்டைப் பெற்றவர் கழகத் தலைவர் தளபதி என்பதை அறியாத ‘தற்குறிதான்’ ஜெயக்குமார், கழகத் தலைவர் அவர்களைப் பற்றி விமர்ச்சித்து அறிக்கை வெளியிட எந்த தகுதியும் இல்லாதவர்.
‘தியாகம் - உழைப்பு - ஆளுமை - சமயோசிதம்’ ஆகியவற்றை பெற்றதுதான் கழகத் தலைவர் அவர்களுடைய ஐம்பதாண்டு கால அரசியல் வாழ்க்கை’ என்பதை இந்தியத் துணைக் கண்டமே வாழ்த்தி பாராட்டி வருவதையும் - தான் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் இந்தநேரம் வரை தமிழ்நாட்டு மக்கள் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு, அல்லும் பகலும் அயராது உழைத்து, அதன் காரணமாக தமிழக மக்களின் மாபெரும் வாழ்த்துக்களையும் - பாராட்டுக்களையும் பெற்று வருவதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சல் காரணமாகவும் - காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் ஜெயக்குமார்.
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் திரைக்கதை, வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி ஆகிய படங்கள் வாயிலாக தனக்கென்று தனி இடம் பெற்றவர் எம்.ஜி.ஆர்.” என்று குறிப்பிட்டுள்ளதில் என்ன குற்றம் கண்டுபிடித்தார் ஜெயக்குமார்.
இந்த இரண்டு படங்கள் மூலமே எம்.ஜி.ஆர். கலையுலகில் பிரபலமானார் என்பது ஊரறிந்த உண்மை. ஆனால், வரலாறு தெரிந்து கொள்ளாத ஜெயக்குமார், இந்த படங்கள் வெளிவருவதற்கு முன்பே என் தங்கை, மர்மயோகி, சர்வாதிகாரி போன்ற வெற்றிப் படங்கள் மூலம் திரையுலகில் எம்.ஜி.ஆர். கோலோச்சினார் என்ற ‘பச்சைப் பொய்யை’ சொல்கிறார்.
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி ஆகிய படங்கள் வெளிவந்த ஆண்டு 1950. ஆனால், ஜெயக்குமார் குறிப்பிட்ட படங்களான மர்மயோகி, சர்வாதிகாரி ஆகிய படங்கள் 1951-லும், என் தங்கை படம் 1952-லும் வெளியிடப்பட்டது என்பதைக்கூட தெரிந்து கொள்ளாமல், தான் ஒரு “தற்குறி” என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
கலைஞர் வசனத்தில் உருவான மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி ஆகிய படங்கள் வெளி வருவதற்கு முன்பாக, எம்.ஜி.ஆர். நெற்றியில் விபூதி பட்டையும் - கழுத்தில் உத்திராட்சை கொட்டையும் - உடலில் கதர்சட்டையும் அணிந்திருந்த எம்.ஜி.இராமச்சந்தரை “எம்.ஜி.இராமச்சந்திரன்” ஆக்கி, பிறகு, ‘புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.’ என்ற பட்டப் பெயர் வரக் காரணமே “கலைஞர்” என்பது வரலாற்று உண்மை. ஆனால், இதையெல்லாம் யாரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளாமலும் - படித்து அறிந்து கொள்ளாமலும், பொத்தாம் பொதுவாக போகிற போக்கில் அறிக்கை வெளியிடுவது ஒரு அமைச்சராக இருந்த ஜெயக்குமாருக்கு அழகல்ல.
கலைஞருக்கும் - எம்.ஜி.ஆருக்கும் இருந்த கலையுலக உறவு, ‘தண்ணீரும் பாலும் கலந்த உறவு’ போல பிரித்து பார்க்க முடியாதது என்பதை கலையுலகம் நன்கு அறியும்.
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் குறித்து ஜெயக்குமார் கூறியிருக்கும் செய்திகள் ‘ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’. எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் துவக்கப்பட்ட வரலாற்றை மக்கள் தெரிந்து கொள்வது அவசியம். டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் என்று பெயர் சூட்டி, திறக்கப்பட்டதும் - அதனை திறந்து வைத்ததும் கலைஞர் என்பதற்கு சான்று அப்பல்கலைக் கழகத்தில் உள்ள திறப்புவிழா கல்வெட்டு.
கலைஞர் அவர்களால், தி.மு.க. ஆட்சியில் துவக்கப்பட்டது என்ற காரணத்தால், தமிழக புதிய சட்டமன்ற கட்டிடத்தை ‘மருத்துவமனை’யாக மாற்றியதையும் - தி.மு.க. ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக ‘மதுரவாயல், துறைமுகம் பறக்கும் சாலை’ திட்டத்தை கிடப்பில் போட்டதும் - ஆசியாவிலேயே பெரிய நூலகமான “அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை’’ மூடிட முயற்சித்ததும் போன்ற கீழ்த்தரமான அ.தி.மு.க. ஆட்சி போன்ற காழ்ப்பை கொண்டவர் அல்ல கலைஞர். 1989ல் தான் ஆட்சிக்கு வந்ததும், பெருந்தன்மையோடு, தனது நாற்பதாண்டு கால நண்பரின் பெயரால் பல்கலைக் கழகம் கண்ட பெருமை கொண்டவர் கலைஞர்.
எம்.ஜி.ஆர். மறைந்தபோது, “ஜா - ஜெ” என்று குடுமிபுடி சண்டை போட்டுக் கொண்டு, எம்.ஜி.ஆர். அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், கண்டு கொள்ளாமல் இரு அணிகளும், தங்களை உருவாக்கிய தலைவரைப் பற்றி கவலை கொள்ளாமல் இருந்தது, அந்த கட்சியின் உண்மையான தொண்டர்களுக்குத் தெரியும். கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன், எம்.ஜி.ஆர். நினைவிடத்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்தவர்.
எம்.ஜி.ஆருக்காக முதலைக் கண்ணீர் விட்டு அறிக்கை விடும் யோக்கியதை ஜெயக்குமார் போன்றவர்களுக்கு அறவே கிடையாது. காரணம், கலைஞர் அவர்களால், சென்னை, அடையாறில் இயங்கி வந்த திரைப்படக் கல்லூரிக்கு “எம்.ஜி.ஆர்.” பெயரை சூட்டி மகிழ்ந்தவர் கலைஞர். ஆனால், அதே கல்லூரிக்கு எம்.ஜி.ஆர். பெயரை நீக்கிவிட்டு, “ஜெயலலிதா” பெயரை சூட்டிக் கொண்டவர்கள் யார்? இன்று அறிக்கை விடும் இந்த ஜெயக்குமாரைப் போன்றவர்கள், அப்பொழுது எங்கே இருந்தார்கள்?
இன்னும் நிறைய உண்மைச் சம்பவங்களை என்னால் சுட்டிக் காட்டிக் கொண்டே போகலாம். ஏனெனில், கலைஞருடனும், எம்.ஜி.ஆருடனும், இவர் பொய்யினை புனைந்து அறிக்கையாக வெளியிட்டுள்ள கழகத் தலைவர் மு.க.ஸ்டாலிடனும் நெருங்கி பழகியவன் நான்.
ஜெயலலிதா மறைந்தபோது, சசிகலா காலில் சாஷ்டங்கமாக விழுந்து - கூவத்தூரில் கும்மாளம் அடித்து - சசிகலாவை சின்னம்மா என்று புகழ்ந்து பேசிவிட்டு, தற்போது அதே சசிகலா கழுத்தில் கால் வைத்து மிதிக்க நினைப்பவர்களுக்கு, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பேசவோ, அவரைப் பற்றி அறிக்கை விடவோ எந்த யோக்கியதையும் இல்லை.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!