Tamilnadu

சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சிறப்பம்சம் என்னென்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேராடியக ஆய்வு செய்தார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) என்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக ஒன்றியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆய்வு நிறுவனம். இந்த மையத்தின் வழியாகத் தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன கட்டிடத்தில் நூலகம், கருத்தரங்குக் கூடங்கள், நிர்வாகப் பிரிவு அறைகள், பன்னோக்கு ஒலி-ஒளி காட்சி கூடம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 24.65 கோடி செலவில் அமைக்கப்பட்டு 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குளிர்சாதன வசதியுடன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்கி வருகிறது.

பல அரிய அச்சு நூல்களையும், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களையும், அரிய ஓலைச்சுவடிகளையும் கொண்டுள்ளது. தமிழின் தொன்மை குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்மொழி தமிழ் ஆய்வு இயக்குனர் சந்திரசேகரன் , தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயர் அதிகாரிகளுடன், நிறுவனத்தின் திட்டங்கள் நோக்கங்கள் அடுத்த கட்ட இலக்கு குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பிறகு ஐங்குறுநூறு பாலை, ஐங்குறுநூறு குறிஞ்சி, களப்பிரர் வரலாறு, வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடு நோக்கில் சங்க இலக்கியம், Dravidian Comparitive Grammer - II, தெய்வச்சிலையார் உரைநெறி, தொல்காப்பிய ஆய்வு மற்றும் A Historical Grammer of Tamil என்ற 8 நூல்களையும் முதல்வர் வெளியிட்டார்.