Tamilnadu

சாக்கடையில் விழுந்த நாய்க்குட்டிகள்.. காப்பாற்ற முடியாமல் தவித்த தாய் நாய்- குமரியில் நெகிழ்ச்சி சம்பவம்!

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்குள்ள கழிவு நீர் ஓடையில் ஏழு நாய் குட்டிகள் விழுந்து சிக்கிக்கொண்டன. குட்டிகள் விழுந்ததைப் பார்த்து தாய் நாய் அவற்றை வெளியே எடுக்க முடியாமல் அங்கேயே சுற்றிச் சுற்றி வந்தது.

இதைப் பார்த்த இரண்டு இளைஞர்கள், தாய் நாயின் நிலையை உணர்ந்து கழிவுநீரில் விழுந்திருந்த நாய்க்குட்டிகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்தனர். உடனே வெளியே வந்த தனது குட்டிகளுக்குத் தாய் நாய் பாலூட்டியது.

மேலும் நாய்க்குட்டிகளும், தாய் நாயும் அந்த இரண்டு இளைஞர்களை அன்போடும், பாசத்தோடும் பார்த்து கண்களாலேயே இவர்களுக்கு நன்றி தெரிவித்தது. இளைஞர்கள் கழிவு நீரில் இருந்து நாய்க்குட்டியை மீட்பதை அப்பகுதி மக்கள் சில வீடியோ எடுத்துள்ளனர்.

இதை அவர்கள் தங்களது சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சகமனிதர்களுக்கு உதவுவதற்கு தயங்கும் இக்காலத்தில் நாய்க்கு உதவி செய்த இளைஞர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Also Read: காதலி தற்கொலை செய்துகொண்டதால் சோகத்தில் காதலனும் தூக்கிட்டு தற்கொலை : நடந்தது என்ன?