Tamilnadu

தமிழ் மொழிக்கு எதிரான விளம்பரம்.. திமுக MLA-வின் கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட ‘ஹைடிசைன்’ நிறுவனம்!

புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் தோல் பொருள்கள் தயாரிக்கும் ஹைடிசைன் (Hidesign) என்ற நிறுவனம் செயல்பட்டுவருகிறது. புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு இயக்கும் ஹைடிசைன் நிறுவனம் அன்மையில் வெளியிட்ட விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

மேலும் தமிழ் மொழியை புறக்கணிக்கும் வகையில் அத்தகைய விளம்பரம் வெளியிடப்பட்டிருந்ததால் அதற்கு தி.மு.க விடுத்த கண்டனத்தால் தற்போது பணிந்துள்ளது. முன்னதாக புதுச்சேரி மாநில அமைப்பாளரும் தி.மு.க எம்.எல்.ஏ.வுமான இரா.சிவா இதுதொடர்பாக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில், “புதுச்சேரி வில்லியனூரில் தொழிற்சாலை அமைத்து, தோல் பொருட்களை உற்பத்தி செய்து, வியாபாரம் செய்யும் ஹைடிசைன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழை புறக்கணித்தது மட்டுமல்லாமல், மொழியியல்வாதிகளுக்கு ஹைடிசைனில் இடமில்லை என்றும் ஆணவத்துடன் வாசகத்தை குறிப்பிட்டு டிசைன் ஒன்றை வெளியிட்டுள்ளதை சமூக ஊடகத்தில் பார்த்தேன். தமிழுக்கும் தமிழர்களுக்கு எதிரான ஹைடிசைன் நிறுவனத்தின் இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ் பேசும் மாநிலமான புதுச்சேரியில், எனது வில்லியனூர் தொகுதியில் தமிழ் தொழிலாளர்களை வைத்தும், தமிழ் மண்ணின் வளங்களை வைத்தும் தோல் பொருட்களை உற்பத்தி செய்து, விற்று பணம் சம்பாதித்துவிட்டு, ஹைடிசைன் தயாரித்த பொருட்களை வாங்கும் தமிழர்களை புண்படுத்தும் வகையில் அவர்களது விளம்பர டிசைன் அமைந்துள்ளது.

தமிழுக்கும், தமிழர்களுக்கும் இவ்வளவு எதிராக பேசும் ஹைடிசைன் நிறுவனம் கால் ஊன்றியது தமிழர்கள் வசிக்கும் தமிழகம், புதுச்சேரியில்தான். பல நூறு தமிழர்களின் உழைப்பால்தான் உலகளவில் ஹைடிசைன் வளர்ந்துள்ளது என்பதை மறுக்க முடியுமா? ஒரு தோல் பை உருவாக்க 2 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகின்றது. அந்த தண்ணீரும்கூட தமிழர்கள் வாழும் பகுதியில் இருந்துதான் எடுக்கப்படுகிறது.

தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தையும், போனசையும் தராமல் போலீசாரை கொண்டு விரட்டியடிக்கும் நிறுவனம்தான் ஹைடிசைன். புதுச்சேரிக்கு வரும் வடமாநில ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை வைத்துக் கொண்டு தமிழ் தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மேலும் புதுச்சேரி தொழிலாளர் துறையின் முழு ஒத்துழைப்பும் ஹைடிசைன் நிறுவனத்திற்கு உள்ளது.

புயலும், கடும் மழையும் பெய்து கொண்டிருந்தபோது கூட போனஸ் கேட்டு போராட்டம் நடத்திய பெண் தொழிலாளர்களை போலிஸைை கொண்டு விரட்டியது. தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை தர வக்கு இல்லாத ஹைடிசைன் தமிழர்களை தன்மானத்தை சீண்டி பார்க்கும் வகையில் ஆணவத்துடன் விளம்பரம் வெளியிட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது.

இந்த விளம்பரத்திற்கு ஹைடிசைன் நிறுவனம் பகிரங்கமாக தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். உடனடியாக அந்த விளம்பரத்தை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும். வாழ்க்கையில் தன்னை உயர்த்தியவர்களிடம் எப்போதும் நன்றியாக இருக்க வேண்டும். அதை மறப்பவர்கள் நீடித்த நாட்கள் உயர்ந்த நிலையில் இருக்க முடியாது. விரைவில் மிகவும் கீழான நிலைக்கு சரிந்து விடுவார்கள் என்றும் எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அந்த பதிவை அவசர அவசராம அந்நிறுவனம் நீக்கியது. அந்த நிறுவனம் வெளியிட்ட மன்னிப்பு பதிவில், “மேலும் தங்கள் செய்த தவறுக்கு வருந்துகிறோம் என்றும் ஒரு நிறுவனமாக நாங்கள் மொழியியல் பன்முகத்தன்மையை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுவதே எங்கள் கடைசி பதிவு. பல்வேறு மொழிகளை குறிப்பிட்டுவிட்டு, நமது கலாச்சாரத்தி முக்கிய அங்கமாக விளங்கும் தமிழ் மொழியை இணைப்பதில் தவறிவிட்டோம். இதற்காக நாங்கள் மனதார வருந்துகின்றோம்” என தெரிவித்தது.

அதுமட்டுமல்லாது அதேவிளம்பரத்தில் தமிழ் மொழியில் ‘தோல்’ என சேர்ந்து புதிய விளம்பரத்தையும் ஹைடிசைன் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “திருநங்கைகளின் ஆடைகளை களைந்து அவமானப்படுத்திய காவலர்கள்” : பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் நடந்த கொடூரம்!