Tamilnadu

“11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது?” அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதில்!

சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வாளகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இருப்பினும் மக்கள் மருத்துவமனைக்கு வருவது குறைவாகவே உள்ளது.

கொரோனா தொற்று பாதித்தவர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வசதியில்லாதவர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இவர்கள்தான் கொரோனா கேர் சென்டரில் உள்ளனர்.

அதேபோல் தொடர் காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல், நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். தொற்றின் வேகம் அதிகரித்து வந்தாலும், மக்கள் மருத்துவமனைக்கு வருவது குறைவாக உள்ளது.

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதைப் பற்றி நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதேபோல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை உடனே துவங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு நடப்பாண்டு முதலே மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதேபோல் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இந்தாண்டே நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழ்நாட்டுக்கு வந்த ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை... முதல்வர் அளித்த மனுவில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்!