Tamilnadu
LIVE-ல் பேசும்போது திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் - அசந்துப்போன பிரதமர் மோடி!
தமிழ்நாட்டில் அரியலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவள்ளூர். ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளையும், சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன மையக் கட்டமும் திறந்து வைக்கும் நிகழ்வு காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
காணொலி வாயிலாக பங்கேற்று மருத்துவக் கல்லூரியையும் செம்மொழி தமிழாய்வுக் கட்டடத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி., ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின் போது பிரதமர் மோடி முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில், “மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி வரும் ஒன்றிய அரசுக்கும் - குறிப்பாக, பிரதமர் மோடிக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசின் இத்தகைய முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள ஆதரவிற்கு நன்றி கூறக்கூடிய அதேநேரத்தில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு மாநில அரசிற்குத் தங்களது அரசு தொடர்ந்து உதவி அளிக்க வேண்டுமென்றும் நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மட்டுமன்றி, மக்களுக்குப் பயன்தரும் மருத்துவத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், தமிழ்நாடு அரசு, குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக அரசு, நாட்டிற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளது.
• கண்ணொளித் திட்டம்,
• முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்,
• மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம்,
• வருமுன் காப்போம் திட்டம்,
• மக்களை தேடி மருத்துவம்,
• நம்மைக் காக்கும் 48
என, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் பலவற்றை என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இவ்வாறு புதுமையான திட்டங்களைத் தீட்டி, சிறப்புறச் செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறைக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடுகள் மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்றும் இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!