Tamilnadu
“இதென்ன உங்க ஆட்சினு நெனச்சீங்களா?” : OPS, EPS-ன் பொய் பிரச்சாரத்திற்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்.ஸின் பொய் பிரச்சாரம் மக்கள் மன்றத்தில் தோற்றுப்போகும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, "கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு 2019ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. 2020ஆம் ஆண்டும் இதேபோன்று வழங்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு நிவாரண நிதியாக குடும்பத்துக்கு 5,000 ரூபாய் வழங்கவேண்டும் என்று, தற்போதைய முதலமைச்சரும் அப்போதைய எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் அவ்வாறு வழங்காமல், அ.தி.மு.க ஆட்சியில் ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது.
அதேநேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். ஆட்சிப் பொறுப்பேற்றபின் 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் வழங்கும் அரசாணையில் முதல் கையெழுத்திட்டார்.
அதன்படி முதல் தவணை மே 10ஆம் தேதியன்றும், இரண்டாம் தவணை ஜூன் 3ஆம் தேதியன்றும் 14 வகை மளிகைப் பொருள்களுடன் கடுமையான நிதி நெருக்கடியான சூழலிலும் வழங்கப்பட்டது. அதேபோன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 வகையான பொருள்களுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் இட்டுக்கட்டப்பட்ட கதைகளைப் பெரிதுபடுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். வெளிப்படையாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, அதில் குறைந்த விலை கோரிய நிறுவனங்களுக்குத்தான் ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இது முன்னாள் முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தெரியாதா? இந்தியாவில் உள்ள எந்த நிறுவனமும், இதுபோன்ற திறந்தவெளி ஒப்பந்தப் புள்ளிகளைக் கோர முடியும் என்பது அவருக்குத் தெரியாதா?
இவர்களுடைய ஆட்சிக் காலத்தில் 20 கிராம் முந்திரி பருப்பு, 20 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட 45 கிராம் பொருளுக்கு வழங்கிய தொகை 45 ரூபாய். தி.முக ஆட்சியில் வழங்கப்பட்ட பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 50 கிராம் முந்திரி பருப்பு, 50 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட 110 கிராம் எடை கொண்ட பொருள் 62 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த 3 பொருள்களிலிருந்து மட்டும் அரசு 48 ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது.
சென்ற ஆண்டு இவர்களுடைய ஆட்சியில் என்ன பெற்றார்கள் என்பது நாட்டுக்கே வெளிச்சம். முறைகேடுகளின் மொத்த உருவம் ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும்தான். தங்கள் ஆட்சியில் நடந்த முறைகேடுகளை மறைப்பதற்காக நேர்மையான முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி வரும் திமுக அரசு மீது பழிபோடுகிறார்கள்.
அ.தி.மு.க ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் பணியமர்த்தப்பட்டவர்களை வைத்துக்கொண்டு இந்தப் பொருள்கள் குறித்து முதலில் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்தார்கள். முதலமைச்சர் கடந்த 3 நாள்களாக நியாய விலைக் கடைகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனால் இந்த பிரச்சாரம் எடுபடவில்லை. எனவே தற்போது ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும் பொய் பிரச்சாரத்தைக் கையில் எடுத்துள்ளார்கள். இந்த பிரச்சாரமும் மக்கள் மன்றத்தில் தோற்கும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பொறுத்தவரையில், அ.தி.மு.க ஆட்சியில்தான் பொருள்கள் வாங்கியது, கரும்பு வாங்கியது, பை வாங்கியது என அனைத்திலும் ஊழல் தலைவிரித்தாடியது. தி.மு.க ஆட்சியில் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்பது அவர்கள் இருவருக்குமே தெரியும். ஆதாரத்துடன் என்னைச் சந்தித்துக் கேட்டால் அவர்களுக்கு பதிலளிக்க நானும் தயாராக இருக்கிறேன், அரசும் தயாராக இருக்கிறது.
தமிழ்நாட்டில் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ளவே இருவரும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்க கொள்முதல் செய்யப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் எந்த முறைகேடுகளும் இல்லை, குளறுபடியும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!