Tamilnadu
“இந்தியா முழுமைக்கும் மாநில சுயாட்சி, சமூகநீதி கொள்கையை மலரச்செய்வதே லட்சியம்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.1.2022) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:
“ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும் -புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் -பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய நிகழ்ச்சியையும் இணைத்து இந்தக் காணொலிக் காட்சி மூலமாக நடந்து கொண்டு இருக்கிறது.
இதற்கான முழு ஏற்பாட்டை ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்திருக்கக்கூடிய வீட்டுவசதி, நகர்ப்புற அமைச்சர் முத்துசாமி அவர்கள் சிறப்பாக இந்தப் பணியை நிறைவேற்றியிருக்கிறார். எதையும் எதிர்பார்ப்பதை விட சிறப்பாக செய்யக்கூடிய பெயரைப் பெற்றவர் முத்துசாமி. பல்வேறு வகைகளிலும் அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும் - இளைஞர்களோடு போட்டி போடும் அளவுக்கு சுறுசுறுப்பாக தனது பணியை செய்து முடிப்பவர் முத்துசாமி.
கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தால், ஈரோட்டில் மாபெரும் விழாவை - விழா என்று சொல்லமுடியாது, ஒரு பெரிய மாநாட்டையே நடத்தியிருப்பார். நானும் நேரடியாக வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றிருப்பேன். ஆனால், கொரோனா என்ற அந்த தொற்று நோய் அந்த நிகழ்ச்சிக்கு தடைபோடக்கூடிய வகையில் அமைந்துவிட்டது.
இருந்தாலும், விழாக்களை விட - மக்கள் உயிர்தான் நமக்கு முக்கியம் என்பதை அருமைச் சகோதரர் முத்துசாமி அவர்கள் நன்றாக அறிவார்கள், நானும் நன்றாக அறிந்திருக்கிறேன், மற்றவர்களும் அறிந்திருக்கிறார்கள். இதைப்பற்றி அதிகமாக விளக்கம் சொல்லவேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில், இன்னொன்று சொல்ல விரும்புவது, இன்னும் சில வாரங்களில் இந்த நோய்த் தொற்று குறையும் நேரத்தில், அதை கட்டுப்படுத்துகிற சூழல் அமைந்த பிறகு, நிச்சயமாக நான் ஈரோட்டுக்கு வருவேன், ஈரோட்டு மக்களை நான் நேரடியாக வந்து சந்திப்பேன்.
ஈரோடு என்பது திராவிட இயக்கத்தின் தாய் வீடு. தந்தை பெரியார் பிறந்த ஊர். பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்ந்த ஊர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் குருகுலம் என்பதும் ஈரோடுதான்.
அதனால், எங்கள் மனதில் குடியிருக்கும் ஊராகத்தான் ஈரோட்டை நாங்கள் எப்போதும் மதித்துக் கொண்டிருக்கிறோம். அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரோட்டில், கழக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு நடக்கின்ற முதல் விழாவில் இந்த காணொலிக் காட்சியின் மூலமாக கலந்துகொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.
மொத்தம் 66 பணிகள் ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்று, இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இவை மொத்தம் 104 கோடி ரூபாய் மதிப்பிலானவை ஆகும்.
அதேபோல 45 கோடி ரூபாய் மதிப்பிலான 365 பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டிருக்கிறது.
* இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், மலைவாழ் மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையான அந்தியூர் வட்டாரம் பர்கூர் ஊராட்சியில் கத்திரிப்பட்டி வன எல்லை முதல் ஈசலங்காடு வரையிலான சாலையைத்தான் நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
* தாளவாடி வட்டாரம் பையணாபுரம் ஊராட்சியில் ஒரு கோடியே 29 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 தடுப்பணைகள் கட்டும் பணிக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
* பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 40 ஆயிரத்து 95 பயனாளிகளுக்கு ரூ.2,0976.71 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறோம்.
கொரோனா காலம் என்பதால்தான், எல்லோரையும் ஒரே இடத்தில் அழைத்துவந்து இந்த நிகழ்ச்சியை நாம் நடத்த முடியவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பயனாளிகள் இருந்து, இந்த நலத்திட்ட உதவிகளை அவர்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மூலமாக பெற இருக்கிறார்கள்.
அனைவருக்கும் முறையாக – சரியாக அந்த உதவிகள் சென்றடைந்தா என்று அதிகாரிகள் கடைசி வரை இருந்து கண்காணிக்க வேண்டும், அதில் அலட்சியமாக இருக்கக்கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
* பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஏற்கனவே 550 எண்ணிக்கையில் படுக்கைகள் இருந்தன. இதனை அதிகரிக்க எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக, ரோட்டரி சங்கத்தின் மூலம் 401 படுக்கைகளும், ‘ஒளிரும் ஈரோடு’தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடு 180 படுக்கைகளும், Fiscal மூலம் 80 படுக்கைகளும், ஏற்கனவே உள்ள கட்டிடத்தில் கூடுதலாக 100 படுக்கைகளும் உருவாக்கப்பட்டு, தற்பொழுது 1,311 எண்ணிக்கையில் பிரமாண்டமான இந்த மருத்துவமனை அமைந்துள்ளது என்பதை நான் அறிவிக்க விரும்புகிறேன்.
அதேபோல் - பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கோவிட் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. 401 படுக்கைகளுடன் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45 நாட்களில் இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்குத் துணை நின்ற ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கங்கள் அனைத்தையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
ரோட்டரி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர், டாக்டர் இ.கே. சகாதேவன், தலைவர் எஸ்.செங்குட்டுவன் ரோட்டரி மாவட்ட ஆளுநர் சண்முகசுந்தரம் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவரையும் அரசின் சார்பில் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன், வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
கொரோனா நோயளிகளுக்கு என்று ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் ஏராளமான நிதி உதவியைச் செய்திருக்கிறார்கள். அவர்களோடு அமைதிப்பூங்கா அறக்கட்டளை, கொங்கு கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட தொழில் நிறுவனங்களும் உதவி செய்திருக்கிறது.
* மருத்துவமனை வளாகம்
* மருந்துகள் சேமிப்பு வளாகம்
* மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரம் ஆகியவை அனைத்தும் உருவாக்கித் தந்துள்ள பெருந்தன்மையைப் நான் அரசின் சார்பில் அவர்களை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஈரோடு மாநகராட்சி 2008 முதல் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 2011 முதல் விரிவடைந்த மாநகராட்சியாகச் செயல்பட்டு வருகிறது. 109.52 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாநகராட்சி மக்களுடைய வசதிக்காக மாபெரும் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை இக்கூட்டத்தின் வாயிலாகத் தெரிவிக்க நான் பெருமை அடைகிறேன்.
இந்தத் திட்ட அறிக்கையில், பெருந்துறையில் ஒரு பேருந்து நிலையமும், ஈரோடு புறநகர்ப் பகுதிகளில் இரண்டு பேருந்து நிலையங்கள் என்று மூன்று பேருந்து நிலையங்கள் அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
சோலார் பகுதியில் ஒரு புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கையில் இருக்கிறது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருச்சி, கரூர், பழனி, வெள்ளக்கோவில் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
சத்தி சாலையில் மற்றொரு பேருந்து நிலையம் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து சத்தி, கோவை, திருப்பூர், ஊட்டி மார்க்கம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
அடுத்து இன்னொரு முக்கியமான அறிவிப்பையும் இந்த நிகழ்ச்சியில் வெளியிட நான் விரும்புகிறேன்.
சிக்கய்ய நாயக்கர் கல்லூரியானது 1954-இல் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இக்கல்லூரியில் இளநிலைப் பட்ட வகுப்பு பதினொன்றும், முதுநிலைப் பட்ட வகுப்பு மூன்றும் இருக்கிறது. 1400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இந்தக் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இந்தக் கல்லூரியானது, அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் 1998-ஆம் ஆண்டு முதல் கோவை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அவர்களைப் பாதுகாவலராகக் கொண்டு, இப்போது செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்கக் கோரி ஏறக்குறைய கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்தக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதை நிறைவேதற்றக்கூடிய வகையில், இந்தக் கல்லூரியை, அரசுக் கல்லூரியாக இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.
இப்படி தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் - புதிய திட்டங்களை தொடங்கி வைத்தல் - முடிந்த திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் ஆகிய விழாக்களைத் தொடர்ந்து இந்த அரசு நடத்திக் கொண்டு வருகிறது.
இதுவரை நான் நேரடியாக கலந்துகொண்டு, 714 கோடி ரூபாய் மதிப்பிலான 185 அரசு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்திருப்பது மட்டுமல்லாமல், 339 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான 190 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். மேலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 8 லட்சத்து 18 ஆயிரத்து 835 பயனாளிகளுக்கு 3 ஆயிரத்து 642 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறேன்.
இன்று ஈரோட்டில் இந்த விழா நடக்கிறது. வரிசையாக எல்லா மாவட்டங்களிலும் இந்த விழாக்கள் நடக்க இருக்கிறது. இவற்றை அரசு விழாக்கள் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதைவிட நான் பெருமையாக சொல்வது, மக்கள் விழா, அதுதான் முக்கியம்.
உங்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசு உங்களுக்கான பல்வேறு பணிகளைச் செய்வது மட்டுமல்ல, கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்காகவே என்னை நான் அர்ப்பணித்திருக்கிறேன்.
கடந்த 5-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஆளுநர் அவர்கள் உரையாற்றினார். அவர் உரையாற்றும்போது, தமிழக அரசின் செயல்பாடுகளை - நாம் ஒவ்வொரு துறை வாயிலாகக் கொண்டு வரும் திட்டங்களை மனம் திறந்து ஆளுநர் அவர்கள் பாராட்டிப் பேசியிருக்கிறார். பொறுப்பேற்ற நொடியில் இருந்து நான் மக்கள் பணியாற்றி வருவதாக ஆளுநர் பாராட்டினார்.
அப்படித்தான் தலைவர் கலைஞர் அவர்கள் எங்களையெல்லாம் பழக்கி வைத்திருக்கிறார். தன்னை, பெரியார் எப்படி பழக்கினார் என்றும் தலைவர் கலைஞர் அவர்கள் எங்களிடத்தில் அடிக்கடி சொல்வார். யானை தன்னுடைய குட்டியை எப்படிப் பழக்குமோ, அப்படி பெரியார் எங்களை மக்கள் தொண்டாற்றப் பழக்கினார் என்று கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.
அதைப் போலத்தான் கலைஞர் அவர்களும் எங்களைப் பழக்கினார். மக்களுக்கு ஒரு துன்பம், துயரம் என்றால் துடிக்கும் உள்ளம் கொண்டவர்களாக எங்களை வடிவமைத்திருக்கிறார். அந்த அடிப்படையில்தான் மக்கள் பணியை நாங்கள் ஆற்றிக்கொண்டு இருக்கிறோம்.
இந்த நிலையில், தமிழகத்துக்கு மட்டுமல்ல - இந்தியாவுக்கே சமூகநீதியை உருவாக்கிக் கொடுக்கும் பெரும் பணியை நாம் செய்து வருகிறோம்.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்காக நாம் எடுத்த சட்டரீதியான முயற்சிகள்தான், அகில இந்தியா முழுமைக்குமான பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு இந்தச் செய்தி இனிப்புச் செய்தியாக அமைந்திருக்கிறது.
தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில், அரசு விழாவில் பங்கெடுக்கின்ற இந்த நேரத்தில், உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கக்கூடிய தீர்ப்பு என்பது பெரியாருக்குக் கிடைத்த காணிக்கையாக நான் நினைக்கிறேன். அவர் உருவாக்கிக் கொடுத்த சமூகநீதித் தத்துவத்தை இன்றைய தினம் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் காலமானது உருவாகி இருக்கிறது. இதைவிட பெரியாருக்கு உண்மையான தொண்டு நிச்சயமாக அமையாது.
அனைத்து வளமும் நலமும் கொண்ட தமிழ்நாட்டை உருவாக்குவதும் - அகில இந்தியா முழுமைக்கும் மாநில சுயாட்சி, சமூகநீதிக் கொள்கையை மலரச் செய்வதையும் நான் என்னுடைய வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டுள்ளேன்.
இந்த இலட்சியப் பயணம் தொடரும் என்பதைச் சொல்லி இந்த நிகழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கக்கூடிய –குறிப்பாக பயனாளிப் பெருமக்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளையும், பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்.”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!