Tamilnadu

"மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்” : போலிஸாருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் - DGP சைலேந்திரபாபு உத்தரவு!

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 10 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும், ஜனவரி 9ஆம் தேதி அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கில் டி.ஜி.பி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள காவல்துறையினருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு:

மாநிலம் முழுவதும் 06.01.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 05.00 மணி வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதோடு 09.01.2022 ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அப்போது பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டும்.

ஒன்றிய மற்றும் மாநில அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், நீதிமன்றம் மற்றும் நீதித்துறை தொடர்பான பணிகளில் ஈடுபடுவோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர், வங்கி, பொதுப் போக்குவரத்து, உள்ளிட்டவர்கள் அலுவலுக்காக பயணம் மேற்கொள்ள அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்கவேண்டும்.

அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், மின்சாரம், தகவல் தொடர்பு, தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து சேவைகள், ATM மையங்கள், சரக்கு மற்றும் எரிபொருள் வாகனங்களில் பணிபுரிவோர் அடையாள அட்டையை பார்வையிட்டு உடனடியாக அனுமதிக்கவேண்டும்.

சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்படும் விவசாய விலை பொருட்கள், காய்கறி, பழங்கள், கறிகோழிகள், முட்டை, போன்ற வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடைசெய்யக்கூடாது. மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சரக்கு வாகனங்களுக்கும் இது பொருந்தும்.

உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில் நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனப்பணியாளர்கள் அடையாள அட்டை காண்பித்து பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

09.01.2022 அன்று முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளபோது உணவகங்களில் பார்சல் சேவைகள் மட்டும் காலை 07.00 முதல் இரவு 10.00 வரை அனுமதிக்கப்டும். உணவு டெலிவரி செய்யும் மின்வணிக நிறுவனப் பணியாளர்களை மேற்குறிப்பிட்ட நேரங்களில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

ஒன்றிய மற்றும் மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையம், நிறுவனங்களின் நுழைவுத்தேர்வு மற்றும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோர் அழைப்பு கடிதத்தை காட்டினால் அனுமதிக்கவேண்டும்.

09.01.2022 அன்று ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வணையம் நடத்தும் குடிமைப்பணிகளுக்கான தேர்வுகள் நடக்கவுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்லும் பயணிகளையும், விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து வீடுகளுக்கு செல்லும் பயணிகளையும் அனுமதிக்கவேண்டும். சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு.

கிராமப்புறப் பகுதிகளில் விவசாயிகள், விவசாயப் பணிக்காக செல்பவர்களை அனுமதிக்கவேண்டும். அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணிமுடிந்து சொந்த ஊருக்கு திரும்புவோரை பயணம் செய்ய அனுமதிக்கவேண்டும்.

வாகனச் சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

வாகனத்தை சோதனை செய்ய வேண்டியிருந்தால் கையுறை அணிந்திருக்க வேண்டும். அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

இரவு வாகனச் சோதனை வெளிச்சம் உள்ள இடங்களில் நடத்த வேண்டும்.

காவலர்கள் தடுப்பாண்கள் அமைத்து ஒளிரும் மேற்சட்டை அணிந்து பாதுகாப்பாக இரவு நேரங்களில் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு, காவல்துறையினருக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Also Read: “இதெல்லாம் யார் செஞ்சது?” : எடப்பாடி பழனிசாமிக்கு பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!