Tamilnadu

“நீங்க Smart ஆக வேலைபார்த்த லட்சணத்தை நாடே பார்த்ததே” : எடப்பாடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

7-1-2022 - ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பதிலுரை (Part- 4)

இன்னொரு மிக முக்கிய உயிர் காக்கும் திட்டம், “இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம்” ஆகும். அது உங்களுக்குத் தெரியும். சாலை விபத்துகளில் சிக்கி, பாதிக்கப்படுகிற விலைமதிப்பற்ற உயிர்களை காக்கக் கூடிய உன்னதமானத் திட்டம். தமிழ்நாட்டில் எந்த மூலையில் ஒருவர் விபத்துக்குள்ளானாலும், அது மற்ற மாநிலத்தவரானாலும், ஏன், வேறு நாட்டைச் சார்ந்தவராக இருந்தாலும் முதல்
48 மணி நேர சிகிச்சையை இந்த அரசே ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய கருணைமிக்க திட்டம். கருணையையே தன்னுடைய பெயரிலே கொண்ட முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அரசு அல்லவா இது! அதனால்தான் அத்தகைய கருணை உள்ளத்தோடு இந்தத் திட்டத்தை நாங்கள் தீட்டியிருக்கிறோம். இந்தத் திட்டத்தின்கீழ், 609 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு, இதுவரை 5,274 பேர் அவசர சிகிச்சைகளைப் பெற்று பயனடைந்திருக்கிறார்கள். விபத்தில் சிக்குகிறவர்களுக்கு “ஒரு கோல்டன் திட்டம்” இது என்பது மட்டுமல்ல; மனித உயிர், மனித உரிமை இரண்டையும் இந்த அரசு இரு கண்கள் போல் காத்து வருகிறது என்பதற்கு மேலும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ள திட்டம்.

மேலும், பருவ மழையும், திடீர் மழையும் தமிழகத்தை விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் சென்னையில் ஒரே நாளில் இரண்டு முறை கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. கொட்டித் தீர்த்தது என்று சொல்வதைவிட, ஏதோ வானைப் பிளந்து ஊற்றுவதுபோல மழை சென்னை மாநகர வீதிகளை நிரப்பியது. ஒவ்வொரு முறையும் மழை வெள்ளப் பாதிப்பு வந்தவுடன் முதல் ஆளாக களத்தில் நிற்கிறவர்தான் உங்களுடைய முதலமைச்சர். (மேசையைத் தட்டும் ஒலி) மக்களின் துயரங்களை நேரில் கேட்டு, அவற்றைச் சீர்படுத்துவதற்கு, துடைப்பதற்கு, துன்ப, துயரங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். நமது அமைச்சர்களும், ஏன் நம்முடைய அதிகாரிகளும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதிகளில் மழை வெள்ள நிவாரணப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு, விவசாயிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்ட இன்னல்களை துடைத்தெறிவதில் பொறுப்புடன் செயல்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல, சமீபத்தில் பெய்த மழையின்போது நான் வெளியூர் பயணத்தில் இருந்தேன். சென்னை திரும்பியவுடன், நேரடியாக விமான நிலையத்திலிருந்து அந்த நள்ளிரவிலேயே மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குக் களமிறங்கி, நடவடிக்கை எடுத்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். (மேசையைத் தட்டும் ஒலி) 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் மழை கொட்டி, குடிநீர் தரக்கூடிய ஏரிகள் எல்லாமே நிரம்பி வழிந்து, முறைப்படுத்தப்பட்ட தண்ணீர் வெளியேற்றத்தின்மூலம் மக்களுக்கு ஏற்படவிருந்த பாதிப்பைத் தவிர்த்தோம்; உடைமைகள் பாதுகாக்கப்பட்டன; உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேசிய பேரிடர் நிவாரண நிதிக்காக இந்த அரசு காத்திருக்கவில்லை. மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 801 கோடி ரூபாய் அதற்கென ஒதுக்கி பணிகளை முடுக்கி விட்டோம்; நிவாரண உதவிகளை வழங்கினோம். இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து ஆலோசனைகளை அவர்களிடத்திலிருந்து பெற்றோம்; தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம். அந்த ஆலோசனைகளின் அடிப்படையில்தான் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் செயல்படுத்திட, நகராட்சி நிர்வாகத் துறை, நீர்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை போன்ற பல துறைகள் இணைந்து அந்தத் திட்டங்களைச் செயலாற்ற வேண்டியிருக்கிறது. இந்தப் பணிகளுக்காக முதற்கட்டமாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்பதை இந்தப் பேரவையிலே நான் அறிவிக்கிறேன். உடனடியாக இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும். இயற்கைப் பேரிடர்களிலிருந்து மக்களைக் காப்பதில் இந்த அரசு உறுதியோடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அடுத்த பருவமழை வருகிறபோது, சென்ற மழையின் துயரங்கள் மக்களுக்கு துளியும் இருக்கக் கூடாது என்பதை மனதில் வைத்து இந்த அரசு தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

காவேரி டெல்டாவில் 61 கோடி ரூபாய் செலவில் குறுவை சாகுபடித் தொகுப்பு வழங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீரைத் திறந்து, கால்வாய்களை முன்கூட்டியே தூர்வாரிய காரணத்தால் 4.9 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்து வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

மாற்றுத் திறனாளிகள் என்று பெயர் சூட்டிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய வழியிலே மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஒரு அறிவிப்பை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடுமையான இயலாமை; கடுமையான அறிவுசார் குறைபாடு; தசைச்சிதைவுகள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்புத் தொகையாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ரூ.1,500/- இனி ரூ.2,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் 2,06,254 பேர் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டொன்றிற்கு 123 கோடியே 75 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் இந்த அவையிலிருந்து இன்றைக்கு வெளியில் சென்று பேசியிருக்கிறார். அதற்கான காரணங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியும். அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. அதேபோல, வெளிநடப்பு செய்து தொடக்கத்திலேயே, இந்த கவர்னர் உரையைப் படிக்கத் தொடங்கியவுடனே வெளிநடப்பு செய்து, வெளியில்போய் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தபோது என்ன சொன்னாரென்றால், மழை, வெள்ளம் குறித்தும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மழை வெள்ளம் குறித்துப் பேச அ.தி.மு.க.-வினருக்கு எந்தத் தகுதியும் இல்லை; எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது. ஏனென்றால், 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல், செம்பரம்பாக்கம் ஏரியை நள்ளிரவில் திறந்துவிட்டு, சென்னை மாநகரத்தையே மிதக்க விட்டனர்; நூற்றுக்கணக்கானோர் மாண்டனர்; வீடுகளும், குடிசைகளும் மூழ்கின; ஏழை - நடுத்தர மக்கள் உடைமைகளை இழந்தனர்; சொந்த ஊரிலேயே தமிழர்கள் அகதிகளாக அலைந்தனர்; இது இயற்கைப் பேரிடர் இல்லை; செயற்கைப் பேரிடர்; man-made disaster என்று பத்திரிகைகள் தலையங்கம் எழுதின; கடைசியில், புண்ணுக்குப் புனுகு தடவுவதைப் போல, நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. Smart City என்று விளம்பரப்படுத்திக் கொண்டு, எந்தெந்த வகையில் Smart ஆக வேலை பார்த்தனர் என்பதை நாடே வேடிக்கை பார்த்து, கைகொட்டி சிரித்தது.

மழை, வெள்ளம்தான் இப்படியென்றால், சட்டம்–ஒழுங்கு குறித்து பேசுவதற்காவது அவர்களுக்குத் தகுதி இருக்கிறதா? கொடநாடு கொலை. கொள்ளையில் தொடங்கி, பொள்ளாச்சி பாலியல் விவகாரங்கள், குட்கா வரை பல்வேறு முத்திரைகளை பதித்தவர்கள்தான் அவர்கள். நான் சொல்லித் தெரியவேண்டுமா? நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். இவற்றை எல்லாம் விரிவாப் பேசி சட்டசபையை, சத்த சபையாக மாற்ற நான் விரும்பவில்லை. குற்றம்சாட்டுவதற்கு முன்பாக தன் கையில் கறை இருக்கின்றதா என்பதைப் பார்த்துவிட்டுப் பேசவேண்டும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் நடக்கின்றது என்று பத்திரிகைச் செய்திகளை வைத்து எங்கேயாவது குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருக்கின்றார்களா? எங்கள் ஆட்சியில். எங்காவது குற்றவாளிகள் தப்பித்துப் போயிருக்கிறார்கள் என்ற செய்தி உண்டா? தப்பிய ஒரேயொரு ஒரு குற்றவாளியையும் 5 ஆம் தேதி கைது செய்துவிட்டோம். வேறு யாராவது தலைமறைவாக இருக்கின்றார்களா, இருந்தால் சொல்லச் சொல்லுங்கள். பதுங்கும் எவரையும் இந்த அரசு பாய்ந்து பிடிக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். பதுங்கக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயமாக அவர்களைப் பிடித்து உரிய தண்டனையை இந்த அரசு வழங்கும்; அதில் எந்த மாற்றமும் கிடையாது. காவல்துறையை ஏவல் துறையாக மாற்றிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார். தூத்துக்குடியில் 13 பேரை துள்ளத் துடிக்க சுடச் சொன்னது யார்? டி.வி.யைப் பார்த்துதான் நான் தெரிந்துகொண்டேன் என்று சொன்னது யார்? அதெல்லாம் நமக்குத் தெரிகின்றதோ இல்லையோ மக்களுக்குத் தெரியும்.

'எங்களது கட்சிக்காரர்களை விசாரணை என்ற பெயரால் அழைத்துச் செல்கிறார்கள்' என்று பொத்தாம் பொதுவாக எதிர்க்கட்சித் தலைவர் பேசியிருக்கிறார். அது எந்த வழக்கு என்பது தெரியவில்லை. அந்த வழக்கு பாயுமோ, இந்த வழக்கு பாயுமோ என்று பயந்து நடுங்குறவங்களுக்கெல்லாம் எங்களால் பாதுகாப்புத் தர இயலாது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. தி.மு.க.-வைச் சேர்ந்தவர்களே யாராவது தவறு செய்தால், ஒரு சின்ன குற்றத்தில் ஈடுபட்டாலும், நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன், அண்ணாமீது ஆணையாகச் சொல்கிறேன், கலைஞர்மீது ஆணையாகச் சொல்கிறேன், இந்த ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

"52 மணி நேர ஆபரேஷன் டிஸ் ஆர்ம்" நடத்தி, 6,112-க்கும் மேற்பட்ட ரவுடிகள் சுத்தி வளைக்கப்பட்டார்கள். "ஒருமாத சிறப்பு கஞ்சா வேட்டை" மேற்கொள்ளப்பட்டு 9,498 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பவர்கள் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள். பள்ளி கல்லூரிகள் வட்டாரத்தில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதை நாம் அடியோடு தடுத்திருக்கிறோம். அதைக் கடுங்குற்றமாக்க சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டு வருகிறது. ரவுடிகளை ஒடுக்க, கூலிப்படைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மாநிலத்தில் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியதால்தான் இன்றைக்கு தொழில் வளர்ச்சியில், புதிய முதலீடுகளை நம்மால் ஈர்க்கமுடிகிறது. புதிய அத்தியாயத்தை இந்த அரசு எழுதிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏழு மாதங்களில் மூன்று முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியிருக்கிறோம். அதன்மூலம் 56 ஆயிரத்து 230 கோடி அளவிலான முதலீடுகள் திரட்டப்பட்டிருக்கின்றது. 1 லட்சத்து 74 ஆயிரத்து 999 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்ற 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. இதில், இதுவரை 21 ஆயிரத்து 508 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், மாநிலத்தில் திட்டமிட்டப் பாதையில் தொழில் வளர்ச்சியை கொண்டு செல்ல வேண்டுமென்ற நோக்கத்தோடுதான் தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை FinTech Policy சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கையும், Tamil Nadu Export Promotion Policy வெளியிடப்பட்டிருக்கின்றது. ஒரகடத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் மருத்துவக் கருவிகள் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. நாட்டுக்கே முன்னோடியாக தூத்துக்குடியில் மாபெரும் அறைகலன் பூங்கா 1,100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு பூங்காங்கள்மூலம் மட்டும் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட இருக்கின்றது. 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு லட்சம் கோடி டாலர் என்கிற இலக்கை எட்டுவதற்காகத்தான் நாங்கள் தினமும் உழைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற அரசு நலத் திட்ட நிகழ்ச்சிகளில், பல நிகழ்ச்சிகளுக்கு நானே நேரிடையாகச் சென்று கலந்து கொண்டிருக்கிறேன். 714.13 கோடி ரூபாய் மதிப்பிலான 185 அரசுத் திட்டப் பணிகளை தொடங்கி வைத்துள்ளேதோடு, 339.86 கோடி ரூபாய் மதிப்பிலான 190 புதிய திட்டங்களுக்கு நாங்கள் அடிக்கல் நாட்டியிருக்கிறோம். மேலும், பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 8 இலட்சத்து 18 ஆயிரத்து 835 பயனாளிகளுக்கு 3 ஆயிரத்து 642 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளேன். தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்ற இந்த அரசு உறுதி பூண்டிருக்கிறது.

ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டியுள்ளபடி, ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பது இந்த அரசினுடைய கொள்கையாகும். தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம், 1956-ல் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், 27 ஆயிரத்து 432 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குப் பெறப்பட்ட 543 கோடி ரூபாயில், கோவிட் தடுப்பு நிவாரணப் பணிகளுக்காக 541.64 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன்; அது தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ். 2 இலட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மகளிருக்கு பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம் நல்ல பலனைத் தந்திருக்கிறது. 40 விழுக்காடாக இருந்த மகளிர் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 61 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.

இந்த நிதியாண்டில், 4 இலட்சத்து 2 ஆயிரத்து 829 பேர் கொண்ட 29 ஆயிரத்து 425 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆக்கிரமிப்பிலிருந்த 1,628 கோடி ரூபாய் மதிப்பிலான 432 ஏக்கர் பரப்பளவிலான திருக்கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தேர்தலுக்கு முன்பு ஒரு தொலைநோக்குத் திட்டத்தை நான் வெளியிட்டேன். அந்தத் தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்ற சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைக்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, விதி 110-ன் கீழான அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தருணங்களில் இந்த 8 மாதங்களில் வெளியிடப்பட்ட 1,641 அறிவிப்புகளில், 1,238 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 75 விழுக்காடு அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 24 விழுக்காடு அறிவிப்புகள், அதாவது, 389 அறிவிப்புகளைச் செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பல்வேறு கட்டங்களில் இருக்கின்றன. 1 விழுக்காடு அறிவிப்புகள், அதாவது 14 அறிவிப்புகள் மட்டும் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளன. இப்படி அறிவிப்புகளை, அதைச் செயல்படுத்தும் விதத்தை வெளிப்படையாக அறிவித்து, ஒளிவு மறைவில்லாத நிர்வாகம் கொடுக்கும் அரசாக இந்த அரசு விளங்குகிறது என்பதை இந்த மாமன்றத்தில் நான் பெருமையோடு சுட்டிக்காட்டுகிறேன்.

இது ஒளிவுமறைவற்ற அரசு மட்டுமல்ல; அனைவருக்கும் ஒளிதரும் அரசு! இது சொன்னதைச் செய்யும் அரசு மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் அரசு! இது ஒரு கட்சியின் அரசு அல்ல, ஓர் இனத்தின் அரசு! இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல, கோடிக்கணக்கான ஸ்டாலின்களின் எண்ணங்களைச் செயல்படுத்தும் அரசு! நாங்கள் இந்தப் பக்கம், நீங்கள் அந்தப் பக்கம் என்று ஓர் அடையாளத்துக்காகத்தான் உட்கார்ந்திருக்கிறோம். நாம் எல்லோரும் சேர்ந்து மக்களின் பக்கம்தான் என்பதை மக்களுக்குச் சேவை செய்வதன் மூலமாகக் காட்டி, எதிர்காலத் தமிழகத்தை ஒளிமயமானதாக அமைப்போம். அதற்கு இந்த ஆளுநர் உரை நிச்சயமாக வழிகாட்டியிருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

ஆளுநர் உரையில், ‘அது இல்லை’, ‘இது இல்லை’ என்று குற்றம், குறை காண்பவர்களுக்கு, பேரறிஞர் அண்ணா அவர்கள் முதமைச்சராக இருந்தபோது, 30-3-1967 அன்று இதே பேரவையில் ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். அதை இங்கே நினைவுபடுத்துவது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். சில காரியங்கள், தேவைகள் என்பதற்காக ஆளுநர் உரையில் விடப்படவில்லை. கோடிட்டுத்தான் காட்டுவார்கள். கவர்னர் உரையில் கோடிட்டுக் காட்டுவதை வைத்துக் கொண்டு, வெற்றிலை பாக்கு போடுவீர்களா என்று கேட்டால், சுண்ணாம்பு தடவாமல் போட்டுக் கொள்ள வேண்டுமென்று அர்த்தமல்ல. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போடுவீர்களா என்று யாரும் கேட்பதில்லை. வெற்றிலை, பாக்கு போடுவீர்களா என்றுதான் கேட்பார்கள். போட்டுக் கொள்கிறேன் என்று சொல்வார்கள். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும்தான் வரும். வெற்றிலை, பாக்குதானே போட்டுக்கொள்ளச் சொன்னார் என்பதால் சுண்ணாம்பு வேண்டாமென்று யாரும் புறந்தள்ளிவிடமாட்டார்கள். அதுபோல, கவர்னர் உரையிலே அது இல்லை, இது இல்லை, ஆகவே இதில் எதுவும் இல்லை என்று தள்ளிவிடலாமா! கவர்னர் உரையிலே சில குறிப்பிட்ட விஷயங்கள் இருக்கும். அதுதொடர்பாக நாம்தான் மற்ற விஷயங்களை யூகித்துக் கொள்ள வேண்டும். குறை காண்பவர்களுக்கு அறிஞர் அண்ணா அவர்களுடைய இந்த விளக்கமே போதும் என்று நான் நம்புகிறேன். இந்த அரசு நடைபோடும் பாதையை அடையாளப்படுத்தும் உரையை ஆற்றிய மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு மீண்டும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அதேசமயம், எதிர்வரும் பொங்கல் திருநாளையொட்டி, 2 கோடியே 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,296 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பதையும் இந்த வேளையில் நான் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன். இதில் முகாம்களில் வாழக்கூடிய இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களும் அடங்குவார்கள். பொங்கல் பரிசினைப் பெற்று தமிழர் திருநாளை, கொரோனா கால கட்டுப்பாடுகளைப் பின்பற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழ்நாட்டு மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை இந்தத் தருணத்தில் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

அதோடு, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கும், மாண்புமிகு உறுப்பினர்களுக்கும் என்னுடைய தமிழர் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரும் கட்சி எல்லைகளை மறந்து - மக்கள் நிலையை உணர்ந்து இந்த ஆளுநர் உரையை மனப்பூர்வமாக வரவேற்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்கள் ஏழு பேர் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது திருத்தங்கள் அளித்திருக்கிறார்கள். தங்கள் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து குறிப்பிட்டிருக்கிறார்கள். உரிய அமைச்சர்களுக்கு நடவடிக்கை எடுக்க அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, மாண்புமிகு உறுப்பினர்கள் தாங்கள் அளித்திருக்கக்கூடிய திருத்தங்களை திரும்பப் பெறுமாறு கேட்டு, அனைவரும் கட்சி எல்லைகளை மறந்து மக்கள் நிலையை உணர்ந்து இந்த ஆளுநர் உரையை மனப்பூர்வமாக வரவேற்க வேண்டும் என்று கேட்டு அமைகிறேன். நன்றி, வணக்கம்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரையாற்றினார்.

Also Read: “இதெல்லாம் யார் செஞ்சது?” : எடப்பாடி பழனிசாமிக்கு பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!