Tamilnadu

“பூச்செடிகளுக்குள் யாருக்கும் தெரியாமல் கஞ்சா செடி வளர்த்த இளைஞர்” : போலிஸ் வேட்டையில் பகீர் தகவல்!

திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியில் சிலர் வீடுகளிலேயே கஞ்சா செடி வளர்ப்பதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலிஸார் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலை நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது முத்தம்பாளையம் அருகேயுள்ள வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள பனியன் கம்பெனி விடுதியில் பூச்செடி வளர்க்கும் பகுதியில் கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து விடுதியில் இருந்தவர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தியதில், அந்த விடுதியில் உள்ளவர்கள் யாரும் அதனை வைக்கவில்லை என்றும், பக்கத்து விடுதியைச் சேர்ந்த ஒருவர்தான் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த நபரை பிடித்து போலிஸார் விசாரித்ததில், அவர் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பது தெரியவந்தது.

இவர் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததாகவும், வெளியில் கஞ்சா கிடைக்காததால், கஞ்சா செடியை வளர்த்து வந்ததாக தெரிவித்துள்ளார். பூச்செடிக்களுக்குள் மறைத்து வளர்த்து வந்த கஞ்சா செடிக்கு தினமும் தண்ணீர் விட்டு வளர்த்து வந்துள்ளார்.

இதனையடுத்து போலிஸார், 2 அடி உயரத்தில் இருந்த 4 செடிகள், 1 அடி உயரத்தில் 3 செடிகள் என 7 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து பார்த்திபனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு வரவேற்கத்தக்கது”: ராமதாஸ் பாராட்டு!