Tamilnadu

“நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு வரவேற்கத்தக்கது”: ராமதாஸ் பாராட்டு!

நீட் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “நீட் நுழைவுத் தேர்வு குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நாம் ஒருமித்த நிலைப்பாட்டினை எட்டுவதற்கு, நமது சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நாளை மறுநாள், அதாவது, 8-1-2022 அன்று கூட்டுவது என்று முடிவு செய்திருக்கிறோம்.

அந்தக் கூட்டத்தில் நீங்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென்று சட்டமன்றக் கட்சிகளுடைய தலைவர்களை நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்; உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். நீங்களும் சேர்த்து நிறைவேற்றிய தீர்மானம்தான் அது. அதனால், அதன் முக்கியத்துவத்தைக் கருதி, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் நீட் தேர்வுக்கு எதிரான, சமூக நீதிக்கான நமது போராட்டம் தொடரும் என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்து அமைகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தகைய நடவடிக்கைக்கு அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களது பாராட்டையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர். இதனிடையே பா.ம.க நிறுவனர் ராமதாஸும் தங்கள் கட்சியின் சார்பில் பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான நீட் விலக்கு சட்டம் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது!

நீட் விலக்கு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தவேண்டும் என்று கடந்த 25-ஆம் தேதியே வலியுறுத்தியிருந்தேன். அந்தவகையில் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ம.க பங்கேற்று ஆக்கப்பூர்வமாக பங்களிக்கும்!

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து எப்பாடு பட்டாவது விலக்கு பெறவேண்டும் என்பதே பா.ம.கவின் நிலைப்பாடு. அதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்கும். ” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “‘நீட்’ தேர்வுக்கு எதிரான நமது சமூக நீதி போராட்டம் தொடரும்”: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!