Tamilnadu

4 வயது மகனுக்கு மறுவாழ்வு கொடுத்த தந்தை.. நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

பெங்களூரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மனைவி சாவித்திரி. இந்த தம்பதிக்கு நான்கு வயதில் குகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் குழந்தை குகனுக்குச் சிறுகுடல் முறுக்கம் பிரச்சனை இருந்துள்ளது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் சென்னையில் உள்ள ரேலா பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அப்போது குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுகுடல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பெற்றோரிடம் கூறினர். மேலும் குழந்தைக்குச் சிறுகுடல் மாற்றுச் சிகிச்சைக்கு அவரின் தந்தை சுவாமிநாதன் தனது சிறுகுடலின் ஒரு பகுதியை தனது குழந்தைக்கு மாற்றுவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரது சிறுகுடலின் ஒரு பகுதியில் 150 செ.மீ நீளமுள்ள சிறு குடல் வெட்டி எடுக்கப்பட்டு, சிறுவனின் வயிற்றில் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை கிட்டத்தட்ட ஏழு மணி நேரத்தில் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனும் அவரது தந்தையும் பூரண நலத்துடன் உள்ளனர். இந்த அறுவை சிகிச்சை மூலம் சிறுவனுக்கு மறு வாழ்வு கிடைத்துள்ளது.

இதையடுத்து 4 வயது சிறுவனுக்கு, நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததால் ரேலா மருத்துவமனை ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. இதனை ஒட்டி, ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று ரேலா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் முகமது ரேலாவிற்கு சான்றிதழ் வழங்கினார்.

Also Read: 1,364 நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற மர்ம கும்பல்.. கசிந்த ரகசிய தகவல் - விமான நிலையத்தில் நடந்தது என்ன?