Tamilnadu
வீடற்று சாலையோரம் வசித்த மக்களுக்கு வீடுகள்... உறுதியளித்தபடி வழங்கிய தி.மு.க MLA - நெகிழ்ந்த மக்கள்!
உறுதியளித்தபடி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் அருகே சாலையோரத்தில் வசித்த குடும்பங்களுக்கு வீடு வழங்கினார் எழும்பூர் தி.மு.க எம்.எல்.ஏ பரந்தாமன்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் அருகே சாலையோரத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். அங்கு வசித்தவர்களைக் கடந்த அக்டோபர் மாதத்தில் மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்திலிருந்து வெளியேற்றினர்.
அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் கண்ணப்பர் திடல் அருகே உள்ள நகர்ப்புற வீடற்றோருக்கான கூடத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டனர். இதனால் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அம்மக்களைச் சந்தித்த எழும்பூர் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், “நடைபாதையில் வசித்த மக்கள், மழைக்காலங்களில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தற்காலிகமாக இந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த மக்கள் தாற்காலிகமாகவே இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்னும் சில நாட்களில் உறுதியாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் ஒதுக்கித் தரப்படும்.” என உறுதியளித்தார்.
உறுதியளித்தபடி இன்று அப்பகுதி மக்களுக்கு எழும்பூர் ராஜா முத்தையா சாலையில் கே.பி.பார்க் திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் 59 குடும்பங்களுக்கும் எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமன் வீடு வழங்கினார்.
மக்களுக்கு வீடு வழங்கிப் பேசிய எம்.எல்.ஏ. பரந்தாமன், “சென்னை முழுவதுமாக ஆங்காங்கே தெருக்களின் ஓரமாக தங்கிருந்த மக்களுக்கு தி.மு.க ஆட்சி வந்தால் நிச்சயம் அவர்களுக்கு குடியிருப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் முதற்கட்டமாக எனது தொகுதியான எழும்பூர் பகுதியைச் சார்ந்த 59 குடும்பங்களுக்கு தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் இன்று வீடு வழங்கப்பட்டது.
இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏஉதயநிதி ஸ்டாலின் இந்தத் திட்டத்திற்கு உதவி செய்தார். அவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!