Tamilnadu

“இதுவரை ரூ.1,640 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு... வேட்டை தொடரும்” : அமைச்சர் சேகர்பாபு உறுதி!

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 24 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

அர்ச்சகர், வேதபாராயணம், இசை உள்ளிட்ட பயிற்சி பள்ளிகளை அதிக அளவில் தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அர்ச்சகர் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் 437 நபர்களிடம் இருந்து 1,640 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளில் இருந்து கோயில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும்.

கடந்த 31ஆம் தேதி இரவு 12 மணி தொடங்கி, 1ஆம் தேதி இரவு 12 மணி வரையில் அனைத்து கோயில்களிலும் தரிசனத்துக்கு அனுமதி அளித்தது இறையன்பர்கள் மனங்குளிரும் வகையில் இருந்தது.

இந்த அரசு ஆன்மிகத்திற்கு எதிராகச் செயல்படவில்லை. அதை நிரூபிக்கும் வகையில் ஆன்மீகவாதிகளை அரவணைத்து செல்கிறது. தமிழக அரசின் அனைத்து நல்ல திட்டங்களையும் பா.ஜ.க எதிர்த்து வருகிறது. இதை விடுத்து ஆக்கபூர்வமான பணிகளுக்கு செயலாற்ற வேண்டும்.

கோயில் நகைகளை உருக்கும் பணிகளில் தொய்வு இல்லாமல் பணி நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் அறங்காவலர் குழு நியமித்து ஒன்றிய அரசின் உருக்கு ஆலைக்கு எடுத்து செல்லப்பட்டு நகைகளை உருக்கும் பணி நடைபெறும்.

தமிழ்நாட்டின் உரிமைகளை யார் பறிக்க நினைத்தாலும் தி.மு.க எப்போதும் விட்டுக்கொடுக்காது. மக்களை பாதிக்கும் திட்டம் என்றால் அதை முதலமைச்சர் எதிர்ப்பார். நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிப்பார்” எனத் தெரிவித்தார்.

Also Read: 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு- இல்லம் தேடி கல்வி தொடரும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!