Tamilnadu
13.5 லட்சம் பேருக்கு கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி; யாருக்குக் கிடைக்கும்?: அரசு அறிவிப்பில் சொல்வது என்ன?
அரசு அறிவித்துள்ள விதிகளின்படி தகுதியுள்ள 13 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு கூறி இருப்பதாவது:-
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, “ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை, சில தகுதிகளின்கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும். இதற்கு ரூ. 6 ஆயிரம் கோடி அரசுக்கு செலவு ஆகும்” என்று கூறினார்.
பொது நகைக் கடன்களை கள ஆய்வு செய்வதற்கு அயல் மாவட்டங்களில் உள்ள அலுவலர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு, சேலம் மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, தகவல் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முடிவடைவதற்கு மேலும் காலதாமதமாகும் என்பதைக் கருத்தில் கொண்டும், இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையின்றி நிதி இழப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டும் 28.12.2021 அன்று பின்வரும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
கணினி மூலம் பகுப்பாய்வு!
அதன்படி, மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட 48,84,726 நகைக்கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35,37,693 கடன்களுக்கு அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி பெறாத நேர்வுகள் என்று முடிவு செய்யப்பட்டு, அந்தப் பட்டியல்கள் அனைத்தும் மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பப் பட்டிருந்தன.
அதில், ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு பயிர்க் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையின்படி இடம் பெற்றுள்ள குடும்பத்தினர், நகைக்கடன் தொகை முழுமையாகச் செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேல் கடன் பெற்ற குடும்பத்தினர், 40 கிராமுக்கு மேல் நகைக்கடன் பெற்ற நபர், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்கள், குடும்ப அட்டை எண் ஆதார் அட்டை எண் வழங்காதவர்கள், எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டையினருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.
ஒரு கடன்தாரர் பயிர்க்கடன் 2021 தள்ளுபடியில் பயன்பெறாமல் இருந்தால், தகுதி பெறும் நகைக்கடன் தாரர்களின் பட்டியலில் இடம்பெற்றிருப்பார்.
இறுதி ஒப்புதல்!
இதுபோன்று கடன் தள்ளுபடி பெறதகுதி பெற்றவர்களின் பட்டியலை குறிப்பிட்டு இறுதி செய்து நேற்று (29ம் தேதி) மாலை 5 மணிக்குள் எக்செல் படிவத்திலும் மற்றும் மண்டல இணைப்பதிவாளர் கையொப்பமிட்டபடி எப்படிவத்திலும் மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.
நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி பெறுபவர்களுக்கு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து இறுதி ஒப்புதல் பெற்ற பின்னரே பொது நகைக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவின்படி நகைக்கடன் பெற்ற 13லட்சத்து 47 ஆயிரத்து 33 பேருக்கு, கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!