Tamilnadu

கண்டெய்னர் லாரியில் சிக்கி 5 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர். நள்ளிரவில் நடந்த கோரச் சம்பவம்!

திண்டுக்கல் மாவட்டம், மோர்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இளைஞரான இவர் வேலைக்குச் செல்வதற்காக நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

பின்னர் வேல்வார்கோட்டை பிரிவு அருகே சென்றபோது திடீரென குணசேகரனின் இருசக்கர வாகனத்தின் மீது கண்டெய்னர் லாரி ஒன்று மோதியது. இதில் குணசேகரனின் உடல் கண்டெய்னர் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டது.

இதையடுத்து, விபத்தை ஏற்படுத்தியதால் லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். இதைப் பார்த்த போலிஸார் கண்டெய்னர் லாரியை 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு விரட்டிச் சென்று பிடித்தனர்.

பின்னர் லாரியின் அடியில் சிதிலமடைந்து கிடந்த குணசேகரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: சீரியலில் மூழ்கிய பெண்கள்; நைசாக சென்று நகைகள் அபேஸ்: ஆடிட்டர் வீட்டில் ஆட்டையப்போட்டவர்களுக்கு வலைவீச்சு