Tamilnadu

மூதாட்டி காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பம்... கொன்று புதைத்த மகன்.. விசாரணையில் ‘பகீர்’!

அரியலூர் மாவட்டம், அமிர்தராயங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரஹாசன். இவரது மனைவி காமாட்சி. முதியோர்களான இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.

மகள்கள் அனைவரும் திருமணமாகி கணவருடன் வசித்து வருகின்றனர். மேலும் இரண்டு மகன்களில் ஒரு மகன் இறந்துவிட்டார். கடைசி மகன் செல்வம், மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமிர்தராயங்கோட்டையில் வித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை மூத்த மகளுக்கு எழுதிக் கொடுப்பதாகக் காமாட்சி முடிவு செய்துள்ளார். இதற்கு மகன் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் தாய்க்கும் மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து கடந்த வாரம் திடீரென காமாட்சியை காணவில்லை. இதனால் அவரது மகன் மற்றும் மகள்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

பின்னர் தனது தாயைக் காணவில்லை என மகள் சுமதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் மகன் செல்வம் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.

இதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில் சொத்துக்காகத் தாயைக் கட்டையால் அடித்து கொலை செய்து, ஓடை அருகே உடலைப் புதைத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து செல்வத்தை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: கத்தியால் குத்தி பெற்ற தாயை தீ வைத்துக் கொளுத்திய மகன்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!