Tamilnadu
பொதுமக்களுக்கு நற்செய்தி: "பொங்கல் பரிசு தொகுப்பை பெற கைரேகை கட்டாயமில்லை”: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!
பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கு கைரேகை கட்டாயமில்லை என்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் உணவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கவுள்ளது தமிழ்நாடு அரசு. இந்த பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைபருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, துணிப்பை ஆகியவை இடம்பெறுகின்றன.
அதோடு ஒரு முழுநீள கரும்பும் வழங்கப்பட உள்ளது.
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்கள், மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படுகிறது.
சென்னை தரமணியில் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள 21 அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் செயல்முறை கிடங்கில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பொங்கல் பொருட்கள் தரத்தை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கான 21 அத்தியாவசிய பொருட்கள் கொண்ட தொகுப்பானது 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
மேலும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெறுவதற்கு கைரேகை கட்டாயம் இல்லை, குடும்ப அட்டையில் பெயர் உள்ள நபர்கள் யார் வேண்டுமானாலும் நியாயவிலைக் கடையில் வந்து பெற்றுச் செல்லலாம். அதே நேரத்தில் வழக்கமான பொருட்களை பெறுவதற்கு கைரேகை கட்டாயம்.
இந்த பரிசு பொருட்கள் அனைத்தும் ஜனவரி 2-ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நியாயவிலை கடைகளுக்குச் சென்றடைந்து விடும். ஜனவரி 3, 4 தேதிகள் முதல் பொருட்கள் வழங்கப்படும். முன்னதாக பரிசுப் பொருள் தொகுப்பினை பெறுவதற்கு டோக்கன் வினியோகம் செய்யப்படும். பொங்கல் பண்டிகைக்கு பணம் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார்.
தமிழ்நாட்டில் 500 கலைஞர் உணவகங்கள் தொடங்குவது தொடர்பாக ஒன்றிய அரசுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஏழை எளியவர்களின் பசியைப் போக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வரும் உணவகம் தொடங்க, அரசு இடம் வழங்கும். உணவகத்திற்கு தேவையான அனைத்து செலவுகளையும் ஒன்றிய அரசே 100% வழங்க வேண்டும். தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல, 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?