Tamilnadu

“மாநகராட்சி தேர்தலில் திமுக நூறு சதவிகித வெற்றியைப் பெற ஓயாமல் பணியாற்றுங்கள்”: உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

“ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, நகர்ப் புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கழகம் நூறு சதவிகித வெற்றியைப் பெற ஓயாமல் பணியாற்றுங்கள்” என்று கோவையில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்றும்போது வேண்டுகோள் விடுத்தார்.

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் - மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவை - கொடிசியா மைதானத்தில் - தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இதில், கழக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவரது உரை வருமாறு :-

பொதுவாகபாக முகவர்கள் கூட்டம் என்றால் அரங்கில்தான் நடைபெறும். ஆனால், தமிழகத்திலேயே இவ்வளவு பெரிய இடத்தில் நடந்தது இதுவே முதல் முறை. நம்முடைய கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அத்தனை பேரையும் சந்தித்துவிட்டு, இப்பொழுது இங்கே உங்களிடம் வந்து நான் உரையாற்றிக் கொண்டிருக்கின்றேன். காலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்பொழுது கூட நான் சொன்னேன், மீண்டும் உங்களிடத்தில் அதை சொல்வதில் தவறில்லை என்று எண்ணுகிறேன். கோவையில் வரவேற்பு - எழுச்சி எல்லாம் எப்பொழுதும் சிறப்பாகத்தான் இருக்கும்.

சட்டமன்றத் தேர்தலில் 45 நாட்கள் பிரச்சாரம்!

சென்ற சட்டமன்றத் தேர்தலில் நான் தமிழ் நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்தேன் - கிட்டத்தட்ட 45 நாள்கள் தொடர்ந்து என்னுடைய தொகுதியை தவிர எல்லா தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தேன். இந்தக் கோவை மாவட்டத்திற்கு மட்டும் இரண்டு நாள்கள் ஒதுக்கியிருந்தோம்; அது போதவில்லை என்பதால், இன்னும் இரண்டு நாள்கள் பொதுமக்களைச் சந்தித்துப் பிரச்சாரம் செய்தேன். சென்ற இடமெல்லாம் எழுச்சியாக இருந்தது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுக்க மிகப்பெரிய வெற்றியை நம்முடைய தலைவர் அவர்களுக்கு, தமிழக மக்கள் அளித்தார்கள். ஆனால், கோவை மாவட்ட மக்கள் மட்டும் காலை வாரிவிட்டீர்கள். அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்றிரண்டு காரணங்களை மட்டும் உங்களிடத்தில் நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

விரைவில் வேலுமணி சிறை செல்வது உறுதி!

ஒன்று, அப்பொழுது ஆளுங்கட்சியாக இருந்த அமைச்சர் வேலுமணி போன்றோர் ஊழல் செய்து அடித்து வைத்திருந்த பணத்தை மக்களிடம் கொடுத்து வாக்குகளாக மாற்றினார். அப்பொழுது பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நம்முடைய தலைவர் அவர்கள் சொன்னார்கள், அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் செய்த அத்தனை பேரும், தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், உள்ளே செல்வது உறுதி என்று சொன்னார்கள். அந்த வேலையும் தொடங்கிவிட்டது. விரைவில், வேலுமணி அவர்கள் உள்ளே செல்வது உறுதி.

சரியாகப் பணியாற்றாதவர்கள் மீது தக்க நடவடிக்கை!

இங்கே அண்ணன் வரதராஜன் அவர்கள் பேசும்பொழுதுகூட சொன்னார்கள்; அவருடைய உள்ளக்குமுறல், கண்டிப்பாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் யார் சரியாகப் பணியாற்றவில்லையோ, அவர்களைக் கட்டம் கட்டவேண்டும்; அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வரதராஜன் அவர்கள் சொன்னார்கள். ஏனென்றால், அவர் பொள்ளாச்சியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்திருக்கக் கூடியவர். அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று நான் நம்பினேன். சரியாகப் பணியாற்றாதவர்கள் மீது கண்டிப்பாக தலைவர் அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்கிற அந்த உறுதி மொழியை நான் கூறுகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய அளவிற்கு வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்தவுடன், முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தலைவர் சொன்னது, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து நான் உழைப்பேன். வாக்காளிக்காதவர்கள், நாம் உதய சூரியன் சின்னத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியினருக்கும் வாக்களிக்கவில்லையே என்று நினைக்கும் அளவிற்கு நான் உழைப்பேன் என்கின்ற உறுதிமொழியை அளித்தார்.

கொரோனா: அமைச்சர்கள் சுற்றிச்சுழன்று பணியாற்றினர்!

8 மாதத்திற்கு முன்பாக நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்பொழுது, தமிழகத்தின் நிலைமை உங்களுக்கு நன்றாகத் தெரியும்; அதைப்பற்றி நான் சொல்லவேண்டிய அவசியமில்லை. கொரோனா தொற்று, தமிழகத்தில் உச்சநிலையில் இருந்தது. அதிலும் குறிப்பாக, கோவை மாவட்டத்தில் மிகவும் அதிகமாக இருந்தது. நம்முடைய தலைவர் அவர்களின் கட்டளையை ஏற்று, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சர்கள் அனைவரும் போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து, தலைவரின்ஆலோசனையைப் பெற்று, சுற்றிச் சுழன்று பணியாற்றினார்கள்.

தலைவர் அவர்களே எங்களை முன்னின்று வழிநடத்தினார். இங்கே உரையாற்றியவர்கள் சொன்னார்கள், கோவைக்கு வந்த நம்முடைய தலைவர் அவர்கள், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களை, அந்த வார்டுக்குள்ளேயே சென்று சந்தித்து, அவர்களுடைய குறைகளைக் கேட்டு வந்தார் என்று. முதல் இரண்டு மாதங்கள், கோவிட்-19 தொற்றிலிருந்து தமிழகத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கே நம்முடைய நேரம் சென்றுவிட்டது. தேர்தல் அறிக்கையில் நிறைய வாக்குறுதி களை நாம் கொடுத்திருந்தோம். அதில் முக்கியமான வாக்குறுதி, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணமும் ஒன்று. ஆனால், அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், கண்டிப்பாக இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது; கண்டிப்பாக அதனை செய்ய முடியாது; திராவிட முன்னேற்றக் கழகம் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கிறது என்று சொன்னார்கள்.

தேர்தல் கால அறிவிப்புகள் நிறைவேறியது!

அதேபோல, கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்குவோம் என்று சொன்னோம். அதையும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் மறுத்த னர்; இது நடைமுறை சாத்தியமல்ல என்று சொன்னார்கள். ஆனால், தலைவர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 10 நாள்களுக்குள் மேற்கண்ட இரண்டு அறிவிப்புகளையும் நடை முறைக்குக் கொண்டு வந்தார். பேருந்தில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய வைத்தார்; அதேபோல, கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.4 ஆயிரத்தை இரண்டு தவணையாக வழங்கினார்.

அதுமட்டுமல்ல, சொல்லாததையும் செய்தோம். கொரோனா நிவாரணப் பொருள்களாக 14 விதமான பொருள்களை ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொடுத்தோம். நானே இந்த கோவை மாவட்டத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இப்படி நம்முடைய ஒவ்வொரு சாதனையையும் இங்கே உரையாற்றிய நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் சண்முகசுந்தரம் சொன்னார். இந்தியாவே பெருமைப்படக்கூடிய அளவிற்கு, ஒட்டுமொத்த தமிழர்களும் பெருமைப்படக் கூடிய அளவிற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய செயல்பாடுகள் அமைந்துள்ளன என்று வட இந்தியாவில் இருந்து வெளிவரும் “இந்தியா டுடே” பத்திரிகை வரிசைப்படுத்தி செய்தி வெளியிட்டிருக்கிறது.

முதலிடத்தில் நமது முதலமைச்சர்!

ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து - ஒவ்வொரு மாநிலங்களிலும் என்னென்ன பணிகள் நடைபெறுகின்றன; என்னென்ன திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள் என்று ஆய்வு செய்து, அந்த ஆய்வின்படி இந்தியாவிலுள்ள முதலமைச்சர்களையெல்லாம் வரிசைப்படுத்துகிறார்கள். அதில் முதல் இடத்தில், நம்முடைய தலைவர் அவர்கள் இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்று மூன்று மாதங்களிலேயே முதலிடத்தில் இருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். இது குறித்து, நம்முடைய தலைவர் அவர்களிடத்தில் செய்தியாளர்கள் கேட்டபொழுது, அவர் சொன்னார், ‘எனக்கு பெருமைதான்; ஆனால், அதைவிட எனக்கு பெருமை என்ன வென்றால், நான் நம்பர் ஒன் முதலமைச்சராக இருப்பதல்ல - தமிழ்நாடே இந்தியாவிலேயே நெம்பர் ஒன் மாநிலமாக வரவேண்டும் என்பது தான். அதை நோக்கியே நம்முடைய பயணம் இருக்க வேண்டும்” என்று சொன்னார். தேர்தல் அறிக்கையில் சொன்னது போன்று,ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்போம் என்று என்று சொன்னோம்; அதையும் செய்து காட்டினோம்.

இந்தியாவே வியக்கும் ‘டேஷ் போர்டு சிஸ்டம்’!

இப்படி பல்வேறு நலத் திட்டங்களை - ஒவ்வொன்றாக தலைவர் அவர்கள் பார்த்துப் பார்த்து செய்துகொண்டிருக்கிறார்கள். இப்பொழுது இந்தியாவே வியக்கும் வண்ணம் இன்னொரு திட்டம் - தலைமைச் செயலகத்திலிருந்து தலைவர் அவர்களின் மேற்பார்வையிலேயே, ஒவ்வொரு திட்டமும் நடக்கவேண்டும் என்பதற்காகவும், தமிழ்நாட்டில் என்னென்ன திட்டங்கள், ஒவ்வொரு தெருவிலும் நடைபெறுகிறது என்பதற்காக டேஷ்போர்டு சிஸ்டத்தை இந்தியாவிலேயே முதன் முதலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். இன்னொரு உதாரணம், சென்னையில் கடந்த மாதம் மிகப்பெரிய வெள்ளம், மழை காரணமாக வந்தது. அப்பொழுதும், தெருவில் இறங்கி, மக்களோடு மக்களாக நின்று, மக்கள் பணியை செய்தது நம்முடைய முதலமைச்சர் அவர்கள்தான். முதலமைச்சர் அவர்களே எங்கெங்கெல்லாம் பாதிப்புகள் இருந்ததோ, முதல் ஆளாக அங்கே நேரில் சென்று ஆய்வு செய்து, அதற்குரிய நிவாரண பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தார்.

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி!

அவரே களத்தில் இறங்கி பணிபுரிகிறார் என்றவுடன் சட்டமன்ற உறுப்பினர்களாக நாங்கள் எல்லாம் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டோம். முதலமைச்சர் அவர்கள், அவருடையதொகுதிக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும சென்று, நிவாரணப் பணிகள் நடைபெறுவதற்கு ஆவன செய்தார். இப்படி ஒரு சிறப்பான ஒரு நல்லாட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இங்கே செந்தில்பாலாஜி அவர்கள் பாக முகவர்களுக்கு மிகத் தெளிவாக ஆலோசனைகளைக் கூறியிருக்கிறார். நாங்கள் என்னதான் பிரச்சாரம் செய்து, மக்களை சந்தித்தாலும், மக்களோடு நேரிடையாக, நெருங்கிய தொடர்பில் இருக்கக் கூடியவர்கள் நீங்கள் மட்டும்தான். வெற்றிக்குச் சாத்தியம் என்றால், அது உங்களால் மட்டும்தான் முடியும். கோவை மாநகராட்சியில், கிட்டத்தட்ட 100 கவுன்சிலர்கள்; இந்த ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில், கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதற்கு நீங்கள்தான் முக்கிய காரணம்; இன்னும் சொல்லப்போனால், நீங்கள்தான் ஒரே காரணம்.

அந்தப் பணியை, அண்ணன் செந்தில் பாலாஜி அவர்கள் சொன்னதைப்போல, உங்களுக்கெல்லாம் ஒரு மினிட் புக் போட்டுக் கொடுத்திருக்கிறார். எனக்குத் தெரிந்து, தமிழ்நாட்டிலேயே முதன்முதலில், பாக முகவர்களுக்கு மினிட் புக் போட்டு கொடுத்தது இந்த கோவை மாவட்டமாகத்தான் இருக்கும். அதற்கு முக்கிய காரணமாக இருந்த செந்தில் பாலாஜி அவர்களை நான் இந்த நேரத்தில் பாராட்டியே ஆகவேண்டும். நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தவுடன், எனக்கு ஒரு சிறு குழப்பமே ஏற்பட்டது; நான் கோவைக்கு வந்திருக்கிறேனா? கரூருக்கு வந்திருக்கின்றேனா? என்று. அந்த அளவிற்கு ஒரு மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய் திருந்தார்கள்.

1957 இல் நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், முதன்முதலாக தேர்தலில் நிற்கிறார்; குளித்தலை சட்டமன்றத் தொகுதி யில். அந்தத் தொகுதி கரூர் மாவட்டத்தில் வருகிறது. அந்த சட்டமன்றத் தேர்தலில், தண்ணீர்பள்ளி என்கின்ற ஒரு கிராமத்தில் உள்ள ஆயிரம் வாக்குகளும், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்திருக்கிறார்கள். இது இந்திய அளவில், மிகப்பெரிய அளவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாகும். இதனை, தலைவர் கலைஞர் அவர்கள், நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல பாகத்தில் உள்ள அனைத்து வாக்குகளையும் பெறும்அளவுக்கு நீங்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இதை நான் இங்கு சொல்கிறேன்.

நீங்கள் எல்லாம் வாக்குறுதிகளைக்கொடுத்திருக்கிறீர்கள். கண்டிப்பாக இந்த கோவை மாநகராட்சி மேயராக, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வரைத் தான் வெற்றி பெற செய்வோம் சொல்லியிருக்கிறீர்கள். உள்ளாட்சித் தேர்தலிலும் 100 சதவிகித வெற்றியையும் பெறுவோம் என்று வாக்குறுதியை அளித்திருக்கிறீர்கள். உங்களுடைய வாக்குறுதியை நான் உறுதி மொழியாக ஏற்று, கண்டிப்பாக அந்தக் வெற்றிக் கனியை நம்முடைய தலைவரிடத்தில் கொடுப்பீர்கள் என்கின்ற அந்த நம்பிக்கையோடு, செந்தில் பாலாஜி சொன்னதைப்போல, வாக்காளர்களிடம் தொடர்ந்து நெருக்கமாக இருங்கள்; அவர்களுடைய தேவைகள் என்னவென்று அறிந்து செயல்படுங்கள். நம்முடைய ஆட்சியின்மீது தமிழக மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள்.

இங்கே செந்தில்பாலாஜி அவர்கள் சொன்னார்கள், கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் மனுக்களை அவர் பெற்றிருக்கிறார்; அதில் முதலமைச்சரை வைத்தே கிட்டத்தட்ட 50 ஆயிரம் மனுக்கள் மீதான நடவடிக்ககளுக்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. என்னிடத்திலே, காலை முதல் இப்பொழுதுவரை 2 ஆயிரம் பேர் மனுக்களை அளித்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மக்களுக்கான ஆட்சி என்று தமிழக மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்; நம்மிடம் மனுக்களைக் கொடுத்தால், அந்த மனுக் களின்மீது நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்கள்; அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

கோவையை விட்டாலும் கோட்டையைப் பிடித்தோம்!

ஆகவே, அந்த மக்களை நீங்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருங்கள். இந்தக் கோவையை விட்டாலும், நாம் கோட்டையைப் பிடித்தோம். ஆனால், நம்முடைய அடுத்த இலக்கு, உள்ளாட்சித் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் நூறு சதவிகித வெற்றியை பெற்றது என்ற அந்த இலக்கை அடையும் வரை நாமெல்லாம் ஓயக்கூடாது என்று கூறி, வந் திருக்கக்கூடிய மாவட்டச் செயலாளர் களுக்கும், நிர்வாகிகளுக்கும், தாய்மார்களுக்கும், பாக முகவர் அத்தனை பேருக்கும், அதேபோல், இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த செந்தில்பாலாஜி அவர்களுக்கும் மீண்டும் மீண்டும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து, நீங்கள் சொன்னது போல, மாதம் ஒருமுறைகோவைக்கு வந்து உங்களையெல்லாம் சந்திப்பதாக இருக்கின்றேன்.

கோவையில் 10 நாள் தங்கி உங்களோடு இருப்பேன்

மாநகராட்சித் தேர்தலில், உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினீர்கள் என்றால், மாதம் 10 நாள்கள் நான் வந்து, இதே கோவையில் தங்கி உங்கேளாடு இருப்பேன். எனவே, உங்களுடைய வாக்குறுதிகளை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு என்னுடைய உரையை நான் நிறைவு செய்கிறேன்" இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

Also Read: மகளுக்குத் திருமணம் செய்து வைத்த நபரை கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற பெற்றோர்: பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன