Tamilnadu

ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை முடக்கிய போலிஸார்.. அடுத்தது என்ன?

பண மோசடி வழக்கில் தலைமறைவான அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகளை போலிஸார் முடக்கி உள்ளனர்.

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, பலருக்கும் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் தலைமறைவானார். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸை போலிஸார் வழங்கி உள்ளனர். தலைமறைவானவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து 9 நாட்களாக தேடி வருகின்றனர்.

ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என போலிஸார் சந்தேகிக்கப்படுபவர்கள் 600 பேரின் செல்போன் சிக்னல்களைப் போலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ராஜேந்திர பாலாஜி விமானம் மூலம் இந்தியாவிற்குள் எங்கும் தப்பிச் செல்லவில்லை என்பதையும் போலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கில் அடுத்த திருப்பம் ஏற்பட்டுள்ளது. பண பரிவர்த்தனை மூலம் அவரது நகர்வுகளை தடுக்கும் வகையில் ராஜேந்திரபாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை போலிஸார் முடக்கி உள்ளனர்.

Also Read: பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார்.. தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் - பின்னணி என்ன?