Tamilnadu

தலைமறைவாக இருந்த செல்வகுமார் கைது.. பண மோசடி வழக்கில் அடுத்து சிக்கப்போவது யார்?

அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றிய வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், இந்த மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த மணியின் நண்பரான செல்வகுமார் என்பவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளரான மணி பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி மீது புகார்கள் தொடர்ச்சியாக குவியத் தொடங்கியதை அடுத்து, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி உட்பட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி உட்பட இருவரும் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், மணி முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த மணியை சேலம் குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த மணியின் நண்பரான செல்வகுமார் என்பவரை கொண்டலாம்பட்டியில் வைத்து போலிஸார் கைது செய்துள்ளனர்.

Also Read: MLA சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி; சிக்கிய பாஜக அமைச்சரின் உதவியாளர்; சென்னை கோர்ட் அதிரடி!