Tamilnadu

திருடு போன நாய்க்குட்டியை சமூக வலைதளங்களின் உதவியுடன் மீட்ட உரிமையாளர்.. கரூரில் நெகிழ்ச்சி சம்பவம் !

கரூர் மாநகராட்சி பகுதியில் வசிப்பவர் சதீஷ்குமார். இவர் கரூர் 5 ரோடு பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். சதீஷ்குமார் தனது சகோதரி மகளுக்காக ரூ. 25 ஆயிரம் வரை செலவிட்டு, ஒரு வயசு உள்ள உயர்ரக வகையான பக் இன நாய் ஒன்றை மயிலாடுதுறையில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வாங்கி வந்தார். அதற்கு ஜோயோ எனவும் பெயர் சூட்டி அக்கா வீட்டில் வளர்த்து வந்துள்ளார்

இதனிடையே அக்கா மகள் படிப்பிற்கு நாய் இடையூறு செய்வதால் சதீஷ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு ஜோயோவை கொண்டு வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தங்களது பிரியாணி கடைக்கு ஜோயவை கூட்டிச்சென்றுள்ளார்.

கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஜோயோவை வாகனத்தில் உட்கார வைத்துவிட்டு, கடைக்குள் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் இருந்த ஜோயோவை காணவில்லை. அருகில் தேடியும் எங்கேயும் இல்லாத காரணத்தால், அருகே உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் ஜோயோவை திருடிய நபர்கள் குறித்தும் அறிந்து கொள்ள முடியவில்லை.

சோர்ந்துபோகாத சதீஷ்குமார் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது நாய் மாயமானது குறித்தும், தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் தரப்படும் என தனது நண்பர்களுக்கு பதிவினை அனுப்பி அதை பகிரவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் நேற்றிரவு கரூர் செங்குந்தபுரம் பகுதியிலுள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் ஜோயோ இருப்பதாக சதீஷின் நண்பரொருவர் வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற சதீஷ்குமார் ஜவுளி நிறுவன உரிமையாளருடன் பேசி தனது செல்லப் பிராணியான யோயோவை திரும்பத்தர கேட்டுக் கொண்டார்.

ஆனால், ஜவுளி நிறுவன உரிமையாளர் தான் பணம் கொடுத்து அந்த நாயை வாங்கியதாகவும் அதனால், கொடுக்க மறுத்தார். இதனிடையே ஜோயோ தனது உரிமையாளர் சதீஷ்குமாரை பார்த்தவுடன் வாலை ஆட்டிக் கொண்டு சந்தோசத்துடன் துள்ளி குதித்து சதீஷ்குமாரிடம் வந்து கொஞ்சியுள்ளது. இவர்களின் உண்மையான பாசத்தை கண்ட ஜவுளி நிறுவன உரிமையாளர் சதீஷ்குமாரிடமே ஜோயவை ஒப்படைத்துள்ளார்.

ஒரு வாரத்துக்கு முன்னால் கடத்தப்பட்ட உயர்ரக நாய் ஜோயோ சமூக வலைதள உதவி மட்டுமல்லாது, உண்மையான அன்பினால் மீண்டு வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பண மோசடி விவகாரம் : ஓடி ஒளிந்து கொண்ட ராஜேந்திர பாலாஜிக்கு ‘லுக் அவுட் நோட்டீஸ்’.. கட்டம் கட்டிய போலிஸ் ?