Tamilnadu

“மன அழுத்தங்களுக்கு பெண்கள் காரணமா? - பெண்களை இழிவுப்படுத்தினாரா கங்குலி?” : சர்ச்சையை கிளப்பிய பேச்சு!

பிசிசிஐ தலைவர் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலி பேசிய விஷயம் ஒன்று இப்போது சர்ச்சையாகியுள்ளது. குறிப்பாக, பெண்கள் இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். கங்குலி அப்படி என்ன பேசினார்?

இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்ட சம்பவம் பலத்த விவாதங்களை கிளப்பியிருந்தது. விராட் கோலியே பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு கங்குலி எந்தவித பதிலுமே தெரிவிக்கவில்லை. இது பற்றி பேசப்போவதில்லை. பத்திரிகையாளர்களை சந்திக்கப்போவதில்லை. நாங்களே பேசி முடிவெடுத்துக் கொள்வோம் என்றெல்லாம் பேசியிருந்தார். ஆனாலும் ஊடகங்கள் சார்பில் கங்குலி விராட் கோலி குறித்து எதாவது பேசிவிடமாட்டாரா என்பதில் குறியாக இருந்தனர்.

இந்நிலையில்தான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கங்குலி பங்கெடுத்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கங்குலியிடம் சில கேள்விகளை கேட்டிருக்கின்றனர். உங்களுக்கு எந்த வீரரின் அணுகுமுறை ரொம்ப பிடிக்கும்? என ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விராட் கோலி என பதிலளித்த கங்குலி, அவரின் அக்ரசன் எனக்கு பிடிக்கும். ஆனாலும் அவர் அதிகமாக சண்டையிடுகிறார் என பேசியிருந்தார். கங்குலி கோலி குறித்து பேசிய இந்த விஷயம்தான் ட்ரெண்டாகி இருக்க வேண்டும்.

ஆனால், அதற்கு எதிர்மாறாக இன்னொரு விஷயம் ட்ரெண்டாகி வருகிறது. அதே நிகழ்ச்சியில் கங்குலியிடம் இன்னொரு கேள்வியும் கேட்கப்பட்டது. அதாவது, 'வாழ்வில் மன அழுத்தங்களை எப்படி கையாள்கிறீர்கள்? என கேட்கப்பட்டது. அதற்கு 'வாழ்வில் மன அழுத்தங்கள் என்று எதுவும் இல்லை மனைவியையும் தோழியையும் தாண்டி' என பேசியிருந்தார். இதுதான் இந்த பதில்தான் இப்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. நகைச்சுவை என நினைத்து கங்குலி பேசிய விஷயம் அவருக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது.

இந்த காலத்திலும் இதையெல்லாம் நகைச்சுவை என நம்பி ஒரு ஆள் அதுவும் கங்குலி மாதிரியான நபர் பேசுவது அருவருப்பாக இருப்பதாக பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். விராட் கோலியின் கேப்டன்சி பிரச்சனை குறித்து கங்குலி எந்த விளக்கமும் கொடுக்காவிடிலும் பெண்கள் பற்றி பேசிய இந்த பேச்சுக்கு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டிய சூழல் ஏற்படும் போல இருக்கிறது.

Also Read: ”விராட் கோலியை பிடிக்கும்; ஆனால் அவர் சண்டை போடுறாரு” - BCCI தலைவர் கங்குலி பேட்டி!