Tamilnadu

15 கிலோ நகைகளை உருக்கி சுடுகாட்டில் புதைத்த கொள்ளையர்கள்.. வேலூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் போலிஸ் அதிரடி!

வேலூர் மாவட்டம் காட்பாடி சாலையில் ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடை உள்ளது. இக்கடையில் உள்ள ஊழியர் கடந்த 14ஆம் தேதி காலை கடையை திறந்தபோது நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

மர்ம நபர்கள் கடையின் பின்புறமாக உள்ள கழிவுநீர் கால்வாயை உடைத்து துளையிட்டு, நகைகடையினுள் சென்று நகைகடையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கேமராக்களிலும் ஸ்பிரே அடித்துவிட்டு, பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து கொண்டு மீண்டும் அதே வழியில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வேலூர் சரக காவல்துறை துணைதலைவர் பாபு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் சம்பந்தபட்ட கடையினுள் விசாரணை செய்து வருகின்றனர். கடையின் உள்ளே அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதில், வைர நகைகள் வைக்கப்பட்டிருந்த தளத்துக்குள் சிங்கத்தலை போன்ற முகமூடி அணிந்து நுழையும் ஒரு நபர் கண்காணிப்பு கேமரா மீது ஸ்பிரே அடிக்கும் காட்சி பதிவாகியிருந்தது. அதன் பிறகு அந்த கண்காணிப்பு கேமராவில் எந்த ஒரு காட்சியும் பதிவாகவில்லை. அதேபோல, அங்குள்ள மேலும் சில கேமராக்கள் மீது முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ஸ்பிரே அடித்து அவற்றை செயலிழக்கச் செய்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் கொள்ளை தொடர்பாக 4 டி.எஸ்.பிகள் தலைமையில் எட்டு தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்றைய தினம், குச்சிபாளையத்தைச் சேர்ந்த டீக்காராமன் மற்றும் கூட்டாளிகளான கண்ணன், பிரபு, வசந்த் உட்பட 10 பேரை பிடித்து போலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.

அந்த விசாரணைக்கு பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ தங்கம் நகைகள் உருக்கப்பட்ட நிலையில் சுடுகாட்டில் புதைத்து வைக்கப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்ததையடுத்து, நகைகளை தோண்டி எடுத்துள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: வேலூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது.. சுற்றிவளைத்த போலிஸ் - சிக்கியது எப்படி?