Tamilnadu

யூடியூப் பார்த்து பிரசவம்; இறந்தே பிறந்த சிசு: மனைவிக்கு தீவிர சிகிச்சை; சிக்கிய கணவரும் சகோதரியும்!

ராணிப்பேட்டை மாவட்ட நெமிலியை அடுத்த நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (35). மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். அவரது நிறைமாத கர்ப்பிணி மனைவியான கோமதிக்கி (28) டிசம்பர் 13ம் தேதி பிரசவ தேதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட தேதி வரை பிரசவ வலி வராமல் இருந்திருக்கிறது.

இந்நிலையில், நேற்று முன் தினம் (டிச,,18) கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாத லோகநாதன் அவரது சகோதரி கீதாவுடன் சேர்ந்து யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்திருக்கிறார்.

இதில் பிறந்த ஆண் குழந்தை இறந்திருக்கிறது. மேலும் கோமதிக்கும் அதிகபடியான உதிரப்போக்கு ஏற்பட்டதால் மயக்கமடைந்திருக்கிறார். இதனையடுத்து அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கோமதி மாற்றப்பட்டிருக்கிறார். மேலும் ஆண் குழந்தை இறந்தே பிறந்தது தொடர்பாக புன்னை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் போலிஸில் புகார் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து நெமிலி போலிஸார் லோகநாதன் மற்றும் அவரது சகோதரி கீதா மீது வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார துணை இயக்குநர் மணிமாறன், பொதுமக்கள் எவரும் இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபட கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: கணவனை கொன்று தூக்கில் தொங்க விட்ட கொடூரம்; நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி? அரும்பாக்கத்தில் பரபரப்பு!