Tamilnadu

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனை திட்டங்களில் மற்றொரு மணிமகுடம்” : தினகரன் தலையங்கம் பாராட்டு!

‘இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48’ திட்டம் முதல்வரின் சாதனை திட்டங்களில் மற்றொரு மணிமகுடமாக அமைந்துள்ளது என தினகரன் நாளேடு தமது தலையங்கத்தில் பாராட்டியுள்ளது.

தினகரன் நாளேட்டின் நேற்றைய (டிச., 19, 2021) தலையங்கம் வருமாறு:

தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகளில் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட காரணம், விபத்தில் சிக்குவோரை உடனடியாக மருத்துவமனைகளில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்காததுதான். இதை தடுக்கவும், விபத்தில் சிக்குவோரின் சிகிச்சைக்காக உதவும் வகையிலும், ‘இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48’ என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு துவக்கியுள்ளது.

இத்திட்டத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் விபத்து நடந்தாலும், விபத்துக்கு உள்ளான நபரை மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையும், விபத்தில் சிக்கியவருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. அதாவது, சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு, மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்பதுதான் இன்னுயிர் காப்போம் என்ற இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

இத்திட்டத்திற்கென 609 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு, உரிய தகுதியின் அடிப்படையில் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயம் அடைவோர்களுக்கு, முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். தமிழக அரசு, சாலை பாதுகாப்பு, சாலை விபத்துகளை குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

இதற்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களுக்கு எல்லாம் முதன்மையான திட்டமாக இத்திட்டம் அமைந்துள்ளது. சாலை விபத்தில் சிக்குவோருக்கு முதலுதவி செய்ய, பலர் முன்வருவதில்லை. காரணம், காவல்துறை வழக்கு, நீதிமன்ற சாட்சி விசாரணை என பல நிலைகளை கடக்கவேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. அதை உடைத்தெறியும் வகையிலும், முதலுதவி செய்யும் நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் இத்திட்டம் அமைந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களும் எம் மக்களே... என்ற கொள்கையை நெஞ்சில் நிறுத்தி, தமிழக அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம் ஆகும்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அத்தனையும் மக்கள் நலன் காக்கும் முக்கிய திட்டங்கள் ஆகும். இவற்றையெல்லாம் ஆய்வு செய்த வடமாநில நிறுவனம், ஒட்டுமொத்த இந்தியாவின் தலைசிறந்த முதல்வராகவும், நம்பர் ஒன் முதல்வராகவும் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அதை, மெய்ப்பிக்கும் வகையில் முதல்வரின் இத்திட்டம், அவரது சாதனை திட்டங்களில் மற்றொரு மணிமகுடமாக அமைந்துள்ளது.

Also Read: “ஓங்கி சிலரின் முகத்தில் அறைந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : வைகோ பாராட்டு!