Tamilnadu

வேலூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது.. சுற்றிவளைத்த போலிஸ் - சிக்கியது எப்படி?

வேலூரில் இயங்கி வரும் பிரபல நகைக்கடையின் கிளையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்து, ஊழியர்கள் வழக்கம்போல் கடையைப் பூட்டிச் சென்றனர். கடந்த 15ம் தேதி காலை 9.30 மணிக்கு ஊழியர்கள் வந்து கடையை திறந்தபோது திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது. தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்த பகுதிகளில் சுமார் 16 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3.50 கோடி எனக் கூறப்படுகிறது.

கடையின் மேல் தளத்தில் உள்ள சுவரில் துளை போடப்பட்டு, மேல்தளத்தில் இருந்து தரைத்தளத்துக்கு நடுவே உள்ள சிமென்ட் தளத்தை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நகைகளை கொள்ளயடித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடையின் உள்ளே அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதில், வைர நகைகள் வைக்கப்பட்டிருந்த தளத்துக்குள் சிங்கத்தலை போன்ற முகமூடி அணிந்து நுழையும் ஒரு நபர் கண்காணிப்பு கேமரா மீது ஸ்பிரே அடிக்கும் காட்சி பதிவாகியிருந்தது. அதன் பிறகு அந்த கண்காணிப்பு கேமராவில் எந்த ஒரு காட்சியும் பதிவாகவில்லை.

அதேபோல, அங்குள்ள மேலும் சில கேமராக்கள் மீது முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ஸ்பிரே அடித்து அவற்றை செயலிழக்கச் செய்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து வேலூர் - காட்பாடி சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், நகைக்கடையின் சுவர் ஓரத்தில் ஒரு விக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது நகைக் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்தவர்கள் அணிந்து வந்ததா எனவும் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளை தொடர்பாக 4 டி.எஸ்.பி தலைமையில் எட்டு தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டிக்கா ராமன் என்பவரை கைது செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: அடுத்தடுத்து 2 நகைக்கடைகளில் சுவற்றை துளையிட்டு 600 கிராம் தங்கம், 10 கிலோ வெள்ளி கொள்ளை : நடந்தது என்ன?