Tamilnadu
“TrueCaller மூலம் இளம்பெண்களை குறிவைத்து பேசி பணம் பறிப்பேன்” - கைதான இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்!
சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிவரும் 25 வயது இளம்பெண் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அவரது புகாரில், சமூக வலைத்தளம் மூலம் தனக்கு அறிமுகமாகி காதலித்து வந்த ராஜ் என்ற நபர் தன்னுடைய ஆபாசப் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், பணம் தராவிட்டால் தன் குடும்பத்தாருக்கு புகைப்படங்களை அனுப்பி விடுவேன் எனக் கூறி மிரட்டுவதாகவும் அவரை கைது செய்யவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அப்புகாரில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த அண்ணாநகர் அனைத்து மகளிர் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அஒபெண்ணுக்கு 5 எண்களில் இருந்து வந்த செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது 4 சிம்கார்டு எண்கள் போலியான ஆவணம் கொடுத்து வாங்கப்பட்டதும் ஒரே ஒரு சிம் கார்டு மற்றும் தேனி மாவட்ட முகவரி கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தேனி மாவட்டம் சென்ற போலிஸார் சிம்கார்டு முகவரியில் இருந்த தேனி மாவட்டம் கன்னி சேர்வைபட்டி கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் (29) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த நிலையில், தொடர் விசாரணையில், தான் ராஜ் என்ற போலியான சமூக வலைதள கணக்கு மூலம் இளம்பெண்ணிடம் பழகி அவரை மிரட்டியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவரை கைது செய்த போலிஸார் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மனோஜ்குமார் பி.டெக் படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவதாக விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு முடி கொட்டியதால் தான் மொட்டை அடித்துக் கொண்டிருந்ததால் தன்னிடம் எந்தப் பெண்ணும் பேசவில்லை எனவும் அதனால் அழகாக இருக்கும் ஆண்களின் புகைப்படத்தை வைத்து ஃபேக் ஐ.டி உருவாக்கி அதன் மூலம் பெண்களிடம் பழகி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ட்ரூ காலரில் சில மொபைல் எண்களை பதிவிட்டு பெண்கள் பெயர் வந்தால், அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி, காதலிப்பது போல பழகி, பின்னர்மிரட்டி அவர்களின் மூலம் பணம் பறித்துக் கொள்ளலாம் என திட்டம் தீட்டி மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், புகார் அளித்த இளம்பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாகப் பழகி, ஆபாச புகைப்படங்களை பெற்றுள்ளார். பின்னர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அப்பெண் போலிஸில் புகார் அளித்தது தெரியவந்தது.
இதனையடுத்து மனோஜ் குமாரிடமிருந்து 10-க்கும் மேற்பட்ட போலி முகவரி சிம் கார்டுகளை பறிமுதல் செய்த போலிஸார், மனோஜ் குமாரை சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!