Tamilnadu

நெல்லையில் வாழும் புறநானூற்று வீரத்தாய்... விருது வழங்கிச் சிறப்பித்த இராணுவம்!

புறநானூற்று பாடல் ஒன்றில், ஒரு தாயிடம் அண்டை வீட்டார் வந்து உன் மகன் போர்க்களத்தில் புறமுதுகிட்டு வீழ்ந்து கிடக்கிறான் என்று சொல்லிச் செல்கின்றனர்.

வெகுண்டெழுந்த அந்த வீரத்தாய், என் மகன் மார்பிலே வேல் தாங்காமல் முதுகிலே வேல்பட்டு வீழ்ந்திருந்தால், அவனுக்கு பால் கொடுத்த என் மார்பை அறுத்தெறிவேன் என்று சபதமிட்டாள்.

போர்க்களம் சென்று ஒவ்வொரு சடலமாகப் பார்த்து தன் மகன் உடலைக் கண்டுபிடித்தாள். தன் மகன் புறமுதுகிட்டு சாகவில்லை. மார்பிலே வேல் தாங்கித்தான் மாண்டுகிடந்தான் என்றறிந்து அவள் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிந்தது.

இந்தப் புறநானூற்று வீரத்தாய் போல, தனது மூன்று மகன்களையும் இராணுவத்திற்கு சேவையாற்றிய தமிழ்நாட்டுத் தாய்க்கு இராணுவம் ‘வீரத்தாய் விருது’ அளித்துச் சிறப்பித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன்- சுப்புலெட்சுமி தம்பதியர். ராமகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு அரிராம், ரத்தினப்பா, சண்முகவேலாயுதம் ஆகிய 3 மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்தத் தம்பதியரின் மூன்று மகன்களும் இராணுவத்தில் பணிபுரிந்துள்ளனர். மூத்த மகன் அரிராம் ராணுவத்தில் பணிபுரிந்த ஓய்வு பெற்றுள்ள நிலையில், ரத்தினப்பா போபாலிலும், சண்முக வேலாயுதம் டெல்லியிலும் இராணுவ மருத்துவப் பிரிவில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது மூன்று மகன்களையும் இராணுவப் பணிக்கு அனுப்பிய தாய், சுப்புலட்சுமி அம்மாளைப் பாராட்டி இராணுவம் சார்பில் அவருக்கு வீரத்தாய் விருதும் வெள்ளிப்பதக்கமும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மாவட்ட படை வீரர்கள் நல அலுவலக உதவி இயக்குநர் முருகன், மூதாட்டி சுப்புலட்சுமிக்கு, வீரத்தாய் விருதும், வெள்ளி பதக்கமும் வழங்கிச் சிறப்பித்தார்.

அத்துடன் இராணுவம் சார்பில் மூதாட்டிக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இது தனது மகன்கள், நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக தனக்கு கிடைத்த மரியாதை என மூதாட்டி சுப்புலெட்சுமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Also Read: “நாட்டுக்காகவே இரத்தம் சிந்திய இராணுவத்தின் இராணுவம் ராவத்” : இராணுவத்திற்கு ‘பிபின் ராவத்’ செய்தது என்ன?