Tamilnadu

“₹46,262 கோடி கடனை ஏற்றுக் கொண்ட மோடி அரசு.. ஏர் இந்தியாவை தக்க வைக்காதது ஏன்?”: தயாநிதி மாறன் MP கேள்வி!

மக்களவையில் துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது நேற்று (14.12.2021) வங்கி கடன் தள்ளுபடிகளில் நிகழும் பாரபட்சம், தமிழ்நாட்டிற்கு சேர வேண்டியவெள்ள நிவாரண நிதி மற்றும் ஜி.எஸ்.டி நிதி குறித்து, வங்கி திவால் சட்டத்தின் மூலம் நிகழும் மோசடி குறித்து பல்வேறு கேள்விகளை ஒன்றிய அமைச்சகத்திடம் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பினார்.

அதன் விவரம் பின்வருமாறு :

கடந்த 200 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மிகப்பெரும் வெள்ளம் ஏற்பட்டது மூன்று முறைதான் அதில் மூன்றாவது முறை கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் வெள்ளம். இது கிட்டத்தட்ட 2015ஆம் ஆண்டு பெய்த பெருமழைக்கு நிகரானது, ஆனால் எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் துரித நடவடிக்கையினால் பெரும் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

பாதிப்படைந்த இடங்களில் மறுசீரமைப்பு பணிகளுக்காக தமிழ்நாடு அரசு கோரியிருந்த 3554.88 கோடி ரூபாயை ஒன்றிய அரசு விரைந்து வழங்கவேண்டும். மேலும் 2017ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ள பாதிப்பின் போது மூன்றே நாட்களில் 500 கோடியை ஒன்றிய அரசு வழங்கிய நிகழ்வை நினைவுக் கூறவிரும்புகிறேன். அதேபோல் தமிழ்நாட்டிற்கும் விரைந்து வெள்ள நிவாரண நிதியை வழங்கவும் வலியுறுத்துகிறேன்.

ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை!

புதிய ஜிஎஸ்டி கொள்கையினால் மாநிலங்கள் தங்களின் பங்குகளை இழந்து வருகின்றன, இந்நிலையில் தமிழ்நாட்டிற்குக்கு சேர வேண்டிய 4943 கோடி ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்குமாறு நிதியமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். 750க்கும் மேலான உறுப்பினர்களின் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்திற்கு வெறும் 1153 கோடி ரூபாய் என்பது மிகவும் குறைவு என்பதால் நிதியமைச்சர் இதுகுறித்து பரிசீலனை செய்து தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும்.

கொரோனா பெருந்தொற்றினால் பல இளைஞர்கள் வேலை இழந்துள்ள இந்த சூழ்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 22,000 கோடி ரூபாய் வழங்குவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார், இது மிகவும் குறைவானது, இதனை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று காரணத்தினால் வேலையின்மை அதிகரித்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் வேலையின் மையால் பாதிக்கப்பட்டுள் ளனர். 2021 ஜனவரி - மார்ச் காலாண்டில் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறையின் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி நகர்ப்புற இந்தியாவின் வேலையின்மை சதவீதமானது 9.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதில் 15-29 வயது இடைப்பட்ட நகர்ப்புற இளைஞர்களின் வேலையின்மை 23 சதவீதமாகும். இப்பிரச்சனையை சரிசெய்யும் வகையிலான அறிவிப்பினை நிதியமைச்சர் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியிடுவார் என நம்புகிறேன்.

ஏலத்தில் ஏர் இந்தியா நிறுவனம்!

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18,000 கோடிக்கு ஏலத்தில் வென்றுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருந்த ஏலதாரர் யார் இருந்தார்கள் என்பதே தெரியவில்லை . செய்தித்தாள்களில் தான் நாம் அறிந்து கொள்ள வேண்டும். PM Cares நிதியைப் போல் இதிலும் தெளிவான தகவல்கள் இல்லை . 18,000 கோடியில் டாடா நிறுவனம் வெறும் 2,700 கோடி தான் பணமாக செலுத்துகிறது. மீதி 15,300 கோடி கடன் சுமையை டாடா நிறுவனம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இச்சூழ்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் கடனில் 46,262 கோடி ரூபாய் அரசாங்கம் ஏற்றுக் கொண்டு 18,000 கோடியில் டாடா நிறுவனத்திற்கு வழங்கி உதவுவதற்கு பதில், ஏன் அந்த மீதி தொகையையும் அரசே செலுத்தி பொதுத் துறையில் ஏர்இந்தியாவை தக்க வைக்ககூடாது. மேலும் ஒவ்வொரு முறை நான் பாராளுமன்றம் வருகையில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் டாடா நிறுவனத்தின் பெயரும் தென்படுகிறது, எனவே தான் டாடா நிறுவனம் அந்த 2700 கோடி ரூபாய் பணமும் அரசிடமே பெற்று அரசுக்கே திருப்பி வழங்குகிறதா என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.

எந்த அரசும் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. நிச்சயம் ஆட்சிகள் மாறும், அப்போது இது குறித்து விவாதிக்கப்படும். கடந்த 7½ ஆண்டுகளாக பாஜக தான் ஆட்சியில் இருக்கின்றது, இருப்பினும் இன்னும் இந்திரா காந்தி, நேரு அவர்களால் தான் இழப்பு என்று கூறுவதை தவிர்த்து நீங்கள் எப்போது உங்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ளப் போகிறீர்கள். இந்த 7½ ஆண்டுகளில் உங்களால் அந்த நிறுவனங்களை லாபத்தில் மாற்ற முடியவில்லையா? நாம் இப்போது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம் ஆனால் நீங்கள் இன்னும் 2004, 2011 கதையையே பேசிக் கொண்டுள்ளீர்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.