Tamilnadu

கண்கவர் வேலைப்பாடுகளுடன் மேம்படுத்தப்பட்ட கலைஞரின் கத்திப்பாரா : நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மெட்ரோ நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட நகர்ப்புற சதுக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

சென்னை ஆலந்தூர், கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, ஆசியாவிலேயே மிகப்பெரியதாக க்ளோவர் இலை வடிவில் மேம்பாலம் கட்டப்பட்டது.

கிண்டி கத்திப்பாராவில், 260 கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் கடந்த 2008ல் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியின்போது திறக்கப்பட்டது.

இந்தப் பாலத்தின் கீழ் காலியாக உள்ள 5,38,000 சதுர அடி பரப்பளவு இடத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து தர முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ரூ. 14.50 கோடி மதிப்பில் நகர்ப்புற சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

கத்திப்பாரா சதுக்கத்தில், ஒரே நேரத்தில், 25 பேருந்துகள் நிறுத்தும் வகையில் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், சிற்றுந்து இயக்கப்பட உள்ளது. அடுத்தகட்டமாக, மாநகரப் பேருந்துகள் இந்த நிறுத்தத்தில் நின்று செல்ல உள்ளது.

இந்த சதுக்கத்தின் வடிவமைப்பு, சென்னை நகரின் அடையாளத்தையும் கலாச்சார செழுமையையும் பிரதிபலிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சதுக்கத்தில் நடைபயிற்சி செய்ய நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே தமிழ் எழுத்து கொண்ட அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேம்பால துாண்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

புல் தரையை சுற்றி அலங்கார விளக்குகள், மையப்பகுதியில் சிமென்ட் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற சதுக்கத்தின் முழுப் பகுதியும் சூரியசக்தி விளக்குகள் மற்றும் உயர்கம்ப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற சதுக்கம், கைவினைப் பொருட்கள் சந்தை, உணவகங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடம் உட்பட இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்பு வசதிகளை உள்ளடக்கியுள்ளது.

இந்த நகர்ப்புற சதுக்கத்தை நாளை (டிசம்பர் 15) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க இருக்கிறார்.

Also Read: மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வரப்பிரசாதம்.. சிற்றுந்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!